கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த தொழிலதிபரை இளம்பெண் ஒருவர் தனது மோசடி வலையில் விழவைத்து அவரிடமிருந்து 2.5 கோடி ரூபாயை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக இருந்த இளப்பெண்ணையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவனையும் போலிசார் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
கொல்லம் கருநாகப்பள்ளி ஓட்டில் படித்தட்டைச் சேர்ந்தவர் ஷெமி 38 வயதான. இவர் வாட்ஸப் மூலம் திருச்சூரைச் சேர்ந்த தொழிலதிபருடன் நட்பாகி உள்ளார். தனக்கு திருமணமாகவில்லை என்றும் தான் விடுதியில் தனியாக தங்கியிருப்பதாகவும், கூறி தொழிலதிபருடனான நட்பைத் தொடர்ந்துள்ளார். நாளடைவில், இருவரும் வீடியோ கால் மற்றும் கைப்பேசி வாயிலாக தங்களின் நெருக்கத்தை அதிகரித்துள்ளனர். ஷெமி கேட்கும் போதெல்லாம் தொழிலதிபரும் பணத்தைக்கொடுத்து வந்திருக்கிறார்.
இப்படி இருவரின் நட்பும் எல்லையைத் தாண்ட, ஒரு கட்டத்தில் அந்த பெண் தொழிலதிபரிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். பணம் கொடுக்க மறுத்தால் தொழிலதிபருடன் நெருக்கமாக பேசிவந்த கால், மற்றும் அவரின் நிர்வாண வீடியோக்களை, தொழிலதிபரின் குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாகக்கூறி அவரை மிரட்ட ஆரம்பித்து இருக்கிறார்.
எங்காவது இந்த வீடியோ வெளியில் கசிந்தால், தனது மனைவி , மற்றும் குடும்பத்தினர் மேலும் நண்பர்களிடையே அவமானமாக போய்விடும் என்று நினைத்த தொழிலதிபர், யாருக்கும் தெரியாமல், தனது கணக்கில் இருந்த பணம் மற்றும் தனது மனைவியின் நகை, மாமியார் பெயரில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை என கிட்டத்தட்ட 2.5 கோடி பணத்தை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிக்கொண்ட அப்பெண் மீண்டும் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டவே... வேறு வழியில்லாமல் போலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
தொழிலதிபரின் புகாரை அடுத்து போலிசார் ஷெமியின் வங்கிக்கணக்கு மற்றும்சைபர் செல் உதவியுடன் அவரை தீவிரமாகத் தேடத் தொடங்கியப்பொழுது, ஷெமிக்கு ஏற்கனவே சோஜன் என்பவருடன் திருமணமாகி கணவருடன் கொல்லம் பனையம் அஷ்டமுடிமுக்கில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், கணவருடன் சேர்ந்து தொழிலதிபரை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
போலிசார் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்துக்கொண்டு கைது செய்ய சென்ற சமயம், தம்பதிகள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
போலிசாரின் தீவிர தேடுதலில் அவர்கள் இருவரும் வயநாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்று இருவரையும் கைது செய்யலாம் என நினைத்த போது, போலிசார் தங்களைத் தேடிவருவதை அறிந்த அந்த தம்பதியினர் அங்கிருந்து தப்பி அங்கமாலி செல்கையில் போலிசார் அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 82 சவரன் நகை மற்றும் 2 சொகுசு கார்கள், 2 ஜீப் மற்றும் ஒரு பைக் ஆகியற்றை மீட்டு அவர்களை போலிசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.