புதுச்சேரியில் சுற்றுலாப் பேருந்தை திருட முயன்றபோது கொள்ளையர்களுக்கு பேருந்தை ஓட்டத்தெரியாததால் தாறுமாறாக இயக்கி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடினர்.
புதுச்சேரியை அடுத்த கலித்தீர்த்தான் குப்பத்தில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான சுற்றுலாப் பேருந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை அப்பேருந்தை 3 பேர் சேர்ந்து கள்ளச்சாவி மூலம் திருடியுள்ளனர். அப்போது பேருந்தை ஓட்டிச்செல்ல முயன்றபோது சரியான ஓட்டுநர் பயிற்சி இல்லாததால் சாலையின் இருபுறமும் இருந்த வீடுகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தினர். பின்னர் ஒரு கட்டத்தில் அந்தச் சாலையிலுள்ள மின் கம்பத்தில் மோதி பேருந்து நின்றது. அதனால் அப்பகுதியில் இருந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. உடனே அச்சத்தில் பேருந்தைத் திருடிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 3 பேரும் தப்பியோடினர்.
மின் கம்பம் சேதமடைந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வெளியில் வந்து பார்த்த பொதுமக்கள் அந்தச் சாலை முழுவதும் வீட்டின் சுவர்கள், வாசலில் நின்ற வாகனங்கள் சேதமடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த திருபுவனை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கார்த்தி என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தனர். தலைமறைவான கார்த்தி மற்றும் அவனது கூட்டாளிகளையும் திருபுவனை போலீசார் தேடி வருகின்றனர்.