பில் வழங்க லஞ்சம் pt desk
குற்றம்

கர்நாடகா: செய்த வேலைக்கு தொகை வழங்க லஞ்சம் கேட்டு, லோக் ஆயுக்தாவிடம் சிக்கிய மூன்று பொறியாளர்கள்!

கர்நாடகாவில் செய்த வேலைக்கு பில் தொகை வழங்க, லஞ்சம் வாங்கிய மூன்று பொறியாளர்கள் லோக் ஆயுக்தாவிடம் சிக்கியுள்ளனர்.

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் துமகூரு சிக்கநாயகனஹள்ளி கிராமிய குடிநீர் மற்றும் சுகாதார துணை பிரிவு சார்பில், சில பணிகள் ஒப்பந்ததாரர் சிக்கே கவுடா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரும் பணிகளை முடித்துவிட்டு, பில்களை சமர்ப்பித்து, தொகையை கோரியுள்ளார்.

அப்போது ‘பணிகளுக்கான மொத்த பில் தொகையில் 6.5 சதவீதம் லஞ்சமாக கொடுக்க வேண்டும்’ என, கிராமிய குடிநீர் மற்றும் சுகாதார துணை பிரிவு உதவி செயல் நிர்வாக பொறியாளர் உமா மகேஷ், பொறியாளர் சசிகுமார், உதவி பொறியாளர் கிரண் ஆகியோர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

Office

இதுகுறித்து, ஒப்பந்ததாரர் சிக்கே கவுடா, லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுத்த லோக் ஆயுக்தா போலீசார், சிக்கநாயகனஹள்ளி அலுவலகத்தில், மூன்று பொறியாளர்கள், சிக்கே கவுடாவிடம் லஞ்சம் வாங்கியபோது, திடீர் சோதனை நடத்தி, கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து மூவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்த பணிகளுக்கு பில் தொகை வழங்க, மூன்று பொறியாளர்கள் லஞ்சம் வாங்கிய போது, லோக் ஆயுக்தாவிடம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.