Accused pt desk
குற்றம்

திருப்பூர்: நூல் மற்றும் துணிகளை வாங்கிக் கொண்டு ரூ.5.40 கோடி மோசடி - மும்பையைச் சேர்ந்த மூவர் கைது

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் கொங்கு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டன் சொக்கானி. இவர், ஓம் சக்தி கோவில் பகுதியில் நூல் மற்றும் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அறிமுகமான மும்பையைச் சேர்ந்த பங்கஜ் அகர்வால், அங்குஷ் சிட்லாங்கியா, ராகுல்குமார் சர்மா ஆகியோர் மும்பையில் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருவதாகவும், தங்களுக்கு நூல் மற்றும் துணிகள் தேவைப்படுவதாகவும் நல்ல விலை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

Police Commissioner office

இந்நிலையில், 10 கோடியே 4 லட்சம் ரூபாய்க்கு நூல் மற்றும் துணிகளை பெற்றுக் கொண்டு 4 கோடியே 64 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து மீதமுள்ள பணத்தை கேட்டபோது காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த சேட்டன் சொக்கானி, மும்பைக்கு சென்று பார்த்தபோது மூவரும் தலைமறைவானது தெரியவந்தது. இது தொடர்பாக சேட்டன் சொக்கானி, மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மூவரையும் பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார், மும்பையில் பதுங்கி இருந்த மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.