குற்றம்

சென்னை: போதைக்காக மாணவர்களுக்கு மாத்திரை விற்பனை... 3 பேர் கைது

சென்னை: போதைக்காக மாணவர்களுக்கு மாத்திரை விற்பனை... 3 பேர் கைது

நிவேதா ஜெகராஜா

கிண்டியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்கப்படுவதாக கிண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து கிண்டி உதவி ஆணையர் சிவா தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் டைடால் மாத்திரையை அவர்கள் வைத்திருந்ததும், அவற்றை போதைக்காக மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் வைத்திருந்திருக்கிறது.

இதனையடுத்து அவர்கள் மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் பரங்கிமலை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (20), விஸ்வநாதபுரத்தை சேர்ந்த ஆண்டர்சன் (22) மற்றும் லோகேஷ் (27) என்பது தெரியவந்திருக்கிறது. இவர்கள் ஆன்லைன் மூலம் போலி டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் தயாரித்து, அதை வைத்து டைடால் மாத்திரைகளை பெற்று போதைக்காக பள்ளி கல்லூரி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிந்துள்ளது. இவர்களிடமிருந்து 700 டைடால் மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார் 3 பேரையும் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.