குற்றம்

சென்னையில் 10 மாத ஆண் குழந்தையை விற்ற தாய் உட்பட மூவர் கைது

சென்னையில் 10 மாத ஆண் குழந்தையை விற்ற தாய் உட்பட மூவர் கைது

நிவேதா ஜெகராஜா
சென்னை செங்குன்றத்தில் குழந்தையை விலைக்கு விற்ற தாய், பெண் தரகர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மருத்துவமனையை சேர்ந்த சில குழந்தைகள் ஆந்திராவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், ஆந்திர மாநிலம் புத்தூரில் அவர்கள் ஆய்வு செய்திருந்தனர். அப்போது, நவநீதம் என்ற பெண்ணொருவர் சென்னையில் இருந்து ஒரு ஆண் குழந்தையை 3 லட்ச ரூபாய்க்கு வாங்கி வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து குழந்தைகள் நல அதிகாரி லலிதா, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் ஆந்திராவில் விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்ட காவல்துறையினர் சென்னையில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்த்தனர்.
மேலும் செங்குன்றம் காவல்துறையினர் நவநீதம் என்ற அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணையும் நடத்தினர். அப்போது, அக்குழந்தை சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த விஜயலக்ஷ்மி என்பவரது குழந்தையென்பது தெரியவந்துள்ளது. குழந்தையை கடந்தாண்டு ஜூலை மாதம் பெண் தரகர் தங்கம் வழியாக பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. விஜயலக்ஷ்மி தன் குழந்தையை பெண் தரகரிடம் ரூ. 85,000-க்கு விற்பனை செய்ததும், பெண் தரகர் அந்த குழந்தையை நவநீதத்திடம் 3 லட்ச ரூபாய்க்கு ஆந்திராவில் விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையை விற்பனை செய்த தாய் விஜயலக்ஷ்மி, பெண் தரகர் தங்கம், குழந்தையை வாங்கிய நவநீதம் ஆகிய மூவரை செங்குன்றம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெற்ற தாயே குழந்தையே விற்பனை செய்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.