திருச்சியில் 2 மாத பச்சிளம் குழந்தையை விற்று சூதாடிய தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி உறையூர் கீழபாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்சலாம். இவரது மனைவி கைருநிஷா. இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளன. இதில் கடைசி குழந்தையான கடந்த 2 மாதத்துக்கு முன் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை, தந்தை அப்துல் சலாம் சமீபத்தில் விற்றுள்ளார். திருச்சியின் அண்ணா நகர் பகுதியிலுள்ள ஆரோக்கியராஜ் என்பவர் மூலமாக தொட்டியம் கீழ சீனிவாசநல்லூரை சேர்ந்த சந்தானகுமார் என்பவரிடம் குழந்தையை விற்றுள்ளார், குழந்தையின் தந்தை அப்துல் சலாம்.
அப்துல் சலாமிடமிருந்து குழந்தையை பெற்றுக்கொண்ட சந்தானகுமார், பத்திற்க்கும் மேற்பட்ட தவணைகளாக சிறிய சிறிய தொகையாக மொத்தம் 80,000 ரூபாய் வரை அப்துல் சலாமுக்கு கொடுத்ததாக தெரிகிறது. இப்படி பெற்ற பணத்தை வைத்து, அப்துல் சலாம் ஆரோக்கியராஜுவுடன் மது குடித்தும் சூதாட்டத்திலும் ஈடுபட்டும் வந்திருக்கிறார்.
முதலில் அப்துல் சலாம் - கைருநிஷா தம்பதியினர் குழந்தையை கொடுக்க சம்மதம் தெரிவித்திருந்தார்கள். பின்பு கைருநிஷா தொடர்ந்து அப்துல் சலாமிடம் தனது குழந்தை வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் உறையூர் காவல் நிலையத்தில் கைருநிஷா புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார் அப்துல்சலாம் ஆரோக்கியராஜ் மற்றும் சந்தான குமாரை கைது செய்தனர். தொடர்ந்து குழந்தையை மீட்ட அவர்கள் தற்பொழுது குழந்தையை பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட மூவரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்ற எண் நான்கில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அதன் முடிவில், அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் (04/2/22) அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது மூவரும் மணப்பாறை கிளைச் சிறையில் உள்ளனர்.