ரயில் நிலையங்களில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பிளாட்பாரத்தில் பட்டாக் கத்தியை தேய்த்துக் கொண்டு வந்த கல்லூரி மாணவர்கள் கைது செய்து பிணையில் விடுவித்தனர்.
சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் புறநகர் மின்சார ரயிலில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கத்தியை வைத்து கொண்டு ரயில் நிலைய நடைமேடையிலும், வண்டியின் மீதும் தேய்த்து கொண்டு பயணிகளை அச்சுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஎஸ்பி முத்துகுமார் தலைமையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் காத்திருந்தனர். அப்போ சென்னை - திருத்தணி செல்லும் மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வந்த மாணவர்களை சோதனை செய்தனர்.
அப்போது, கத்தியை வைத்திருந்த பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த தனுஷ் மற்றும் பூண்டி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மதன் ஆகிய இரு மாணவர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது தனுஷ் தப்பியோடிய நிலையில் மதன் (17) என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த குற்றத்திற்காக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களான திருவள்ளூர் அடுத்த நெய்வேலியைச் சேர்ந்த விஜயகுமார், அரக்கோணம் ரெட்டிவளத்தைச் சேர்ந்த பாலா, ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த தீபக், ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், திருவள்ளூரைச் சேர்ந்த ஆகாஷ், பெரியகுப்பத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் திருவள்ளூர் ரயில்வே போலீசார் பிணையில் விடுவித்தனர். இதில் கத்தியை பிளாட்பாரத்திலும், ரயில் வண்டியின் மீதும் தேய்த்து சென்றதாக கைது செய்யப்பட்ட மதனுக்கு 17 வயதே ஆவதால் அவனை சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தப்பியோடிய தனுஷ் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.