செல்போன் செயலிகள் மூலம் சுமார் ரூ.5 கோடிகள் வரை மோசடிகள் செய்த நபர்களை கைது செய்து அதிரடி நடவடிக்கை நடத்தியுள்ளது சென்னை மாநகர காவல்துறை.
கல்லூரி வளர்ச்சிக்கு லோன் பெற்று தருவதாக கூறி செல்போன் செயலி மூலம் பணம் பறித்து மோசடி செய்த 4 நபர்கள் உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றும் செல்போன் சாட் செயலி மூலம் பழகி ரூ.56 லட்சம் பணத்தை ஏமாற்றிய 1 பெண் உட்பட இருவர் கோவாவில் கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
லோன் தருவதாக அங்கீகரிக்கப்படாத செல்போன் செயலிகளின் மூலம் லோன் பெற்று திரும்ப செலுத்த தாமதமாகும்போது பொதுமக்கள் மிரட்டப்படும் சம்பவங்கள் நிகழ்ந்ததன் அடிப்படையில் சென்னை பெருநகர காவல்துறை, சைபர் காவல் நிலையங்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையம் ஆகியவற்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது .
இதற்கென தனிப்படை அமைக்கப்படு ஆய்வு செய்தபோது லோன் செயலிகளோடு தொடர்புடைய 200க்கும் மேற்பட்ட இமெயில் முகவரிகள் ( Email IDs ) , வங்கி கணக்குகள் , 900க்கும் அதிகமான வாட்சப் (Whatsapp) எண்கள் சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு ( Nodal Officers) கோரிக்கை அனுப்பப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டது .
அதன்பேரில், தீவிர விசாரணை மேற்கொண்டதில் லோன் ஆப் மூலம் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து செயல்படுவது தெரியவந்தது.
இந்நிலையில் காவல்துறையின் தனிப்படை ஒன்று வெளி மாநிலங்களுக்கு சென்று, ஹரியானா மாநில காவல்துறை உதவியுடன் தீபக்குமார் பாண்டே, ஜித்தேந்தர் தன்வர், நிஷா பிரகாஷ் சர்மா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 7 லேப்டாப்கள், 19 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல் செல்போன் உரையாடல் செயலி (Mobile Chatting Application) மூலம் பழகி ரூ.56 லட்சம் பணத்தை ஏமாற்றிய 1 பெண் உட்பட இருவரை கோவாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தோஷ் குமார் என்ற நபர் சென்னை காவல் ஆணையகரத்தில் அளித்த புகாரில், ஷியாமளா என்ற பெண்ணுடன் சாட்கரோ என்ற செல்போன் செயலி மூலம் பேசி வந்ததாகவும், அந்த பெண் சாப்ட்வேர் கம்பெனியில் கேன்டீன் நடத்தும் காண்ட்ராக்ட் எடுத்து தருவதாக கூறியதன் பேரில் ரூ.56 லட்சம் பணத்தை கொடுத்து ஏமாந்ததாக புகாரளித்தார். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் கலையரசன் தலைமையிலான குழுவின் புலன் விசாரணையில், குற்றவாளியின் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது கண்டறியப்பட்டதால், செல்போன் எண்களின் CDRஐ ஆய்வு செய்து வங்கி கணக்கு விவரங்களை ஆராய்ந்து ட்ரேஷ் செய்ததில் குற்றவாளி கோவாவில் தங்கியிருப்பது உறுதி ஆனது.
அதன்பேரில், சைபர் கிரைம் காவல் குழுவினர் கோவா சென்று, அங்கு தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு சாட் செயலி மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சக்திவேல் மற்றும் பிரியாவை கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் இவர்கள் சாட்கரோ என்ற செல்போன் செயலி மூலம் இது போல சுமார் 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் பேசி, பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த மோசடி வழக்குகளில், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை தேடிச்சென்று கைது செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் மற்றும் ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு காவல் அதிகாரிகளை நேரில் வரவழைத்து பாராட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுமதிகளை வழங்கினார்.