குற்றம்

சென்னை: சட்டவிரோத டிஜே நிகழ்ச்சி - மேலும் மூவர் கைது

சென்னை: சட்டவிரோத டிஜே நிகழ்ச்சி - மேலும் மூவர் கைது

JustinDurai

திருமங்கலம் வி.ஆர். மாலில் சட்டவிரோதமாக டிஜே நிகழ்ச்சி நடத்திய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை திருமங்கலத்தில் அமைந்துள்ள வி.ஆர் மாலில் கடந்த 21ஆம் தேதி நடந்த டிஜே நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஐடி ஊழியர் பிரவீன் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது ரூப் டாப்பில்  சட்டவிரோதமாக 300 பேர் ஒன்று கூடி டிஜே நிகழ்ச்சி நடத்தி மதுபான பார்ட்டி நடத்தியதும், உரிமம் பெறாமல் மங்கி பார் நடத்தி வந்ததும் தெரியவந்தது. சட்டவிரோதமாக நடத்திய மங்கி பாரிலிருந்து மதுபானங்கள் மற்றும் 27 ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து சட்டவிரோதமாக பார் நடத்தியதாக அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு  போலீசார் வழக்குபதிவு செய்து மெட்ராஸ் ஹவுஸ் மேனேஜர் நிவாஸ் போஜராஜ், எட்வின், மங்கி பார்  மேலாளர் பரத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மங்கி பார் மேலாளரான மடிப்பாக்கத்தை சேர்ந்த பவன், ஈவண்ட் இன்சார்ஜ் கோடம்பாக்கத்தை சேர்ந்த மார்க், ஈவண்ட் கோ ஆர்டினேட்டர் விக்னேஷ் சின்னதுரை ஆகிய மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்கலாம்: சென்னை பாஜக நிர்வாகி கொலை வழக்கு - 4 பேர் எடப்பாடியில் கைது