பட்டப்பகலில் மக்கள் கூடும் இடங்களில் டிப் டாப் உடையில் வந்து பெண்களிடம் நகை, செல்போன் பறித்துச் செல்லும் சாந்தி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தில்லு சாந்தி என்று தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்ட சாந்தி, பட்டப்பகலில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிப்டாப் உடையில் வந்து பெண்களிடம் நகை, செல்போன், வைர வளையல், டூவீலரை திருடி தில்லாக சென்னை நகரில் சுற்றி வந்தவர். திருவள்ளூரைச் சேர்ந்த இவர், தி.நகர், பல்லாவரம், தாம்பரம் என பல பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஷாப்பிங் மால்களில் டிப்டாப் உடையில் வந்து பெண்களின் கைப்பையில் லாவகமாக கை விட்டு கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடுவதில் கில்லாடி. இவரை கண்காணிக்க தனிப்படை அமைத்து தேடிவந்த தி. நகர் போலீசார், தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
பகல் நேரத்தில் மக்கள் கூடும் இடங்களில் திருடியதால் தனக்குத்தானே தில்லு சாந்தி என்று பெயர் வைத்துக்கொண்டதாக கூறும் இவர், திருமணமான ஒருவருடத்தில் கணவரை பிரிந்து விட்டதாகவும் வயிற்றுப் பிழைப்புக்காக திருட ஆரம்பித்து பின்னர் சொகுசு வாழ்க்கைக்காக திருடியதாகவும் கூறுகிறார். இவரிடம் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர வளையல், 12 சவரன் தங்க நகைகள், 2 செல்போன்கள், பைக் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சாந்தி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.