குற்றம்

சென்னை: ஏடிஎம்களில் பணம் கொள்ளையடித்தது எப்படி? - நடித்துக் காட்டிய கொள்ளையன்

சென்னை: ஏடிஎம்களில் பணம் கொள்ளையடித்தது எப்படி? - நடித்துக் காட்டிய கொள்ளையன்

Sinekadhara

சென்னையில் எஸ்.பி.ஐ. ஏடிஎம்களில் பல லட்சம் ரூபாயை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் கைதான ஹரியானாவை சேர்ந்த அமீர் அர்ஷ் பணத்தை எப்படி கொள்ளையடித்தார் என காவல்துறையினரிடம் நடித்துக் காட்டினார்.

சென்னையில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் கடந்த 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. 15 ஏடிஎம்களில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹரியானாவை சேர்ந்த 10 கொள்ளையர்கள் குழுக்களாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ள நிலையில், தனிப்படை காவல்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக அமீர் அர்ஷ் மற்றும் அவரது கூட்டாளி வீரேந்தர ராவத் உள்பட மூன்று பேர் இதுவரை கைதாகியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அமீர் அர்ஷை பெரியமேடு எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மிற்கு அழைத்து வந்தனர். அப்போது பணத்தை கொள்ளை அடித்தது எப்படி என அவர் நடித்துக் காட்டினார். இந்த ஏடிஎம்மில் இருந்து 5 கொள்ளையர்கள் 15 லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடித்துள்ளனர். குறிப்பாக 190 முறை இந்த ஏடிஎம்மில் அவர்கள் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே மீதமுள்ள 7 கொள்ளையர்களை பிடிக்க தமிழ்நாடு காவல்துறையினர் ஹரியானாவில் முகாமிட்டுள்ளனர்.