குற்றம்

தூத்துக்குடி: பெண்ணிடம் 17 சவரன் செயின் பறிப்பு - புதுமாடல் பைக்கால் சிக்கிய கொள்ளையன்

தூத்துக்குடி: பெண்ணிடம் 17 சவரன் செயின் பறிப்பு - புதுமாடல் பைக்கால் சிக்கிய கொள்ளையன்

Sinekadhara

தூத்துக்குடியில் பெண்ணிடமிருந்து 17 சவரன் செயின் பறித்துச்சென்ற கொள்ளையன் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளால் போலீசிடம் சிக்கியுள்ளார். 

தூத்துக்குடி ரோச் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரீகாந்த். இவருடைய மனைவி ஆஷா (30). இவர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஆஷா கழுத்தில் இருந்த 17 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து ஆஷா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவரை கைதுசெய்ய உத்தரவிட்டார். தனிப்டையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததன்மூலம் தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் பகுதியை சேர்ந்த நயினார் (வயது 21) செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் ரூபாய் 6,00,000/- மதிப்பிலான 17 சவரன் தங்க நகை கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை அதன் உரிமையாளரான ஆஷாவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ’’திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் நவம்பர் மாதத்தில்தான் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமாதிரியான இருசக்கர வாகனம் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக்குறைவு என்பதால் வாகனத்தை விற்பனை செய்த இருசக்கர வாகன விற்பனையகம் மூலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேட ஆரம்பித்தோம்.‌ அதன் விளைவாக நயினார் போலீசிடம் சிக்கிக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலின்போது கோவில்பட்டியில் 2 வழக்குகளும், தூத்துக்குடியில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரிய வன்முறைகள், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவ படையினர் 72 பேரும், 2வது அடுக்கில் 50 சிறப்பு காவலர்களும், 3 அடுக்கில் டிஎஸ்பி தலைமையில் 150 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசியல் கட்சியினர் இதனை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.