குற்றம்

பேருந்து நிலையத்தில் மதுபோதையில் ஒருவரையொருவர் தாக்கிகொண்ட கும்பல்.. ஓமலூர் பரபரப்பு!

webteam

ஓமலூர் பேருந்து நிலையத்தில் மது போதையில் ஒரு கும்பல் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறை ஏற்படுத்தினர். பேருந்து நிலையப்பகுதியில் திறந்தவெளியிலேயே அமர்ந்து மது குடிப்பதால், தொடர்ந்து இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் இரண்டு டாஸ்மாக் அரசு மதுபான கடைகள் உள்ளன. இந்த இரண்டு கடையிலும் தினமும் ஐந்து லட்சத்திற்கு மேல் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. பேருந்து நிலையத்திலேயே இருப்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து மது அருந்தியும் வாங்கியும் செல்கின்றனர். மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி சந்தை பகுதியில் வெட்டவெளியில் அமர்ந்து மது குடிக்கின்றனர். இதனால், பேருந்து நிலைய பகுதியே திறந்தவெளி பாராக மாறியுள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் கும்பல் கும்பலாக இங்கே வந்து அமர்ந்து மது குடித்துவிட்டு செல்கின்றனர். மேலும், மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை பேருந்து நிலைய திறந்தவெளி பாரில் அருகருகே இரண்டு கும்பல் மது குடித்துள்ளது. அப்போது ஒருவருக்கொருவர் வாய்த்தகராறு செய்துள்ளனர். இந்த வாய்த்தகராறு மோதலாக மாறியது. பின்னர் பேருந்து நிலைய பகுதியில் கும்பலாக ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். இதனால், பேருந்து நிலைய பகுதியில் கும்பல் கூடியது. மது போதையில் தாக்கி கொண்டவர்களை அங்கு கூடியிருந்த மக்கள் விளக்கி விட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அங்கு கூடியிருந்த கும்பலை விரட்டி அனுப்பினர். மேலும், மோதலில் ஈடுபட்டவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். இதனிடையே மீண்டும் மோதலில் ஈடுபட முயன்றனர். அதனால், அங்கே தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து ஒருவர் தப்பியோடினார். அவரை விரட்டி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களின் உறவினர்களை வரவழைத்து, பேருந்து நிலையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது குறித்து தெரிவித்தனர். மேலும், இரண்டு கும்பல் மோதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமலூர் பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி சந்தையின் திறந்தவெளியில் அமர்ந்து மது குடிப்பதை தடுக்க வேண்டும் என்றும், கடையில் மதுவை வாங்கி வெளியே வந்து கடை முன்பாகவே கும்பல் கும்பலாக அமர்ந்து மது குடிப்பதை தடுக்க வேண்டும் அல்லது பேருந்து நிலையத்தில் உள்ள இரண்டு மது கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.