கைதான கனகதுர்கா pt desk
குற்றம்

தேனி: அரசு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 18 பேரிடம் மோசடி - இளம்பெண் கைது

தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் எனக்கூறியும், 18 பேரிடம் அரசு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறியும் மோசடி செய்த இளம் பெண்ணை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ் கண்ணா

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சுந்தர் விக்னேஷ் என்பவரின் சகோதரி திவ்யா. தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் திவ்யா.

கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்த சிறுவனின் தாயார் கனகதுர்கா (30) என்பவருடன் திவ்யாவிற்கு அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போது பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநராக மதுரையில் பணிபுரிந்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கனகதுர்கா, அரசுத் துறை உயரதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை தனக்கு நன்கு தெரியும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து பணம் கொடுத்தால் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கனகதுர்கா தெரிவித்துள்ளார். அதனை உண்மை என நம்பிய திவ்யா தனக்கு அரசு ஆசிரியர் பணியும், தன் சகோதரர் விக்னேஷ் சுந்தருக்கு பள்ளிக்கல்வித் துறையில் கணினி ஆப்ரேட்டர் பணியும் மற்றும் அவரது நண்பர் இசாஜ் அகமதுக்கு ஒரு வேலையும் வேண்டும் எனக்கூறி ரொக்கமாகவும், வங்கிக் கணக்கு மூலமாகவும் 18 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கனகதுர்கா, திவ்யாவின் பெயரில் ஆசிரியர் பணிக்கான அரசு பணியாணை ஒன்றை பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டதாக கூறி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அரசு ஆசிரியர் வேலைக்குச் செல்ல திவ்யா தயாரான போது, கனகதுர்கா வழங்கிய பணியாணை போலியானது எனத் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா, தனது சகோதரர் சுந்தர் விக்னேஷ் மூலமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார்.

புகாரின்படி, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கனகதுர்கா பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநர் இல்லை என்பது தெரியவந்தது. இதேபோல் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 18 பேரிடம் அரசு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை கனகதுர்கா மோசடி செய்ததும் தெரியவந்தது.

Police Office

இதையடுத்து கனகதுர்கா, ஒச்சு என்ற சூர்யா மற்றும் சரண்யா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஏற்கனவே ஒச்சு என்ற சூர்யாவை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து கனகதுர்காவை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கம்பத்தைச் சேர்ந்த சரண்யாவை போலீஸார் தேடி வருகின்றனர்.