3 பேரை கைது செய்துள்ள போலீசார் pt desk
குற்றம்

தேனி|பிறந்து 52 நாட்களேஆன குழந்தை விற்பனை என வந்த தகவல்.. உடனடியாக களத்தில் இறங்கி மீட்ட அதிகாரிகள்!

தேனியில் பிறந்து 52 நாட்களேயான ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: ரமேஷ் கண்ணா

கடந்த புதன்கிழமை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான சைல்ட் லைன் 1098 என்ற எண்ணிற்கு வந்த அழைப்பில் தேனி மாவட்டம் போடி தாலுகா உட்புக்கோட்டை கிராமத்தில் பெற்ற தந்தையே தனது குழந்தையை வேறொருவருக்கு விற்பனை செய்துவிட்டதாகவும் நடவடிக்கை எடுக்குமாறும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவல், தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சந்தியாவிற்கு பகிரப்பட்டது. இதையடுத்து சந்தியா, வீரபாண்டி போலீசாருக்கு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

Male Baby rescued

விசாரணையில், தேனி உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் பாண்டீஸ்வரி தம்பதியர் கடந்த சில வாரங்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. மேலும் போடியைச் சேர்ந்த சிவக்குமார் - உமா மகேஸ்வரி தம்பதியருக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு குழந்தையை சங்கர் விற்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

இதையடுத்து குழந்தையை விற்பனை செய்த சங்கர்- பாண்டீஸ்வரி தம்பதியர் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய சிவக்குமார் - உமா மகேஸ்வரி ஆகியோரிடம் தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை சங்கர் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய சிவகுமார் - உமா மகேஸ்வரி ஆகிய மூவர் மீதும், வழக்குப் பதிவு செய்த தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவர்களை கைது செய்தனர்.

Police station

இந்நிலையில், மீட்கப்பட்ட குழந்தை தேனி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த பச்சிளம் குழந்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்தபின் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை பராமரிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.