செய்தியாளர் : ரமேஷ் கண்ணன்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கண்டமனூர் அருகே ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் 50 வயது நிரம்பிய பால்பாண்டி. இவர் தனியார் நாளிதழ் ஒன்றின் தேனி மாவட்ட நிருபராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பிரதோஷ தினமான நேற்று மாலை நிருபர் பால்பாண்டியும் அவரது மனைவியும், தங்கள் வீட்டருகில் உள்ள சிவன் கோயிலை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அப்பகுதியில், அடையாளம் தெரியாத மூவர், கையில் அரிவாளுடன் சுற்றித்திரியவே சந்தேகமடைந்த பால்பாண்டி அம்மூவரின் வாகனத்தையும் வழிமறித்து அவர்களிடம் “யார் நீங்கள்? எதற்காக அரிவாளுடன் இதே பகுதியயி சுற்றி வருகின்றீர்கள்?” என்று விசாரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பால்பாண்டியை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரின் இடதுபக்க தலையில் பலமாக வெட்டியுள்ளனர்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த பால்பாண்டி அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். பின்னர் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தலையில் 20க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நிருபர் பால்பாண்டி கொடுத்த புகாரின்படி, கண்டமனூர் போலீஸார் அடையாளம் தெரியாத மூவர் மீதும் 296 b BNS பொது இடத்தில் ஆபாசமாக திட்டுதல், 111 (1) BNS மரணத்தை ஏற்படுத்தும் ஆயுதத்தால் வெட்டுதல், 351 (3) மரணத்தை ஏற்படுத்தும் கடுமையான காயம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிகழ்விடத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போடி ஏரதிமக்கள்பட்டியை சேர்ந்த கணேசன் மற்றும் சின்னச்சாமி, ஜி.உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டிகண்ணன் ஆகிய மூவரை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.