செய்தியாளர்: திருக்குமார்
தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரம் கிராமத்தில் இருந்து குச்சனூர் செல்லும் இணைப்புச் சாலை அருகே வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் ரத்தக் காயங்களுடன் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சென்ற சின்னமனூர் காவல்துறையினர், அடையாளம் தெரியாத உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் போடி அருகே மாணிக்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சென்ராயன் (40) என்பதும், கடந்த மாதம் இவர், உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவரது வீட்டை அடித்து நொறுக்கியதாக புகார் எழுந்தது. இதன் பேரில் வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருந்தனர். பின்னர் சென்றாயன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி தான் சென்ராயன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் வெளியே வந்த சில நாட்களிலேயே அவர், கத்தியால் 22 இடங்களில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது குடும்ப பிரச்னையில் கொல்லப்பட்டாரா, சென்ராயனை கொலை செய்தது யார்? என்பது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் சென்ராயனும் அவரது மனைவியும் வேறு ஒருவருடன் பைக்கில் சென்றதை கடைசியாக பார்த்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து சென்ராயனின் மனைவி பூங்கொடி (33) மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பூங்கொடி, அதே பகுதியை சேர்ந்த ராஜபிரபு (23) என்பவருடன் சேர்ந்து, சென்ராயனை கொலை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த சின்னமனூர் காவல்துறையினர், பூங்கொடி மற்றும் ராஜபிரபு ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.