திருப்பூரில் பனியன் கடையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளைப்போயுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவை கொண்டு திருட்டில் ஈடுபட்ட பெண்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் டெல்லியை சேர்ந்த சந்தீப் சர்மா என்பவர் டி சர்ட்களுக்கு தேவையான பட்டன், ஜிப் ஆகியவற்றை மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடையின் பின்புறம் உள்ள குடோனில் விற்பனைக்கு தேவையான பொருட்களை மொத்தமாக இருப்பு வைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடோனின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜிப் மற்றும் பட்டன்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் கடையின் உரிமையாளர் சந்தீப் சர்மா புகாரளித்தார்.
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தீப் சர்மாவின் கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவை ஆய்வு செய்கையில் அதிகாலை 5 மணியளவில் மூன்று
பெண்கள் குடோனின் உள்ளே வந்து கண்காணிப்பு கேமராவை வேறு பக்கம் திருப்பியுள்ளது பதிவாகியிருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு கேமராவில் பதிவாகியிருந்த பெண்கள் பொருட்களை திருடி சென்றிருக்கலாம் என்கின்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு அப்பெண்களை தேடி வருகின்றனர். இதே நிறுவனத்தில் கடந்த ஜனவரிமாதம் அறுபதாயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருப்பதாகவும் நிறுவன உரிமையாளர் தெரிவித்தார்.