குற்றம்

உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்... மடக்கி பிடித்த காவல்துறை!

உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்... மடக்கி பிடித்த காவல்துறை!

webteam

கெங்கவல்லி அருகே உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து இரு நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே இளைஞர் ஒருவர் இரு நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக கெங்கவல்லி போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் ஆகியோருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது இளைஞர் ஒருவர் இரு நாட்டுத் துப்பாக்கியுடன் இருப்பதைக் கண்டு அவரிடம் விசாரிக்க முயன்றார்.

அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த இளைஞர், நாட்டுத் துப்பாக்கிகளை அருகில் இருந்த புதரில் வீசி விட்டு தப்பி ஓடினார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கெங்கவல்லி காவல்நிலைய போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தப்பியோடிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த சீனி என்பவரின் மகன் சிவா (22) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிவாவை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இரு நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.