குற்றம்

சொத்திற்காக கணவனை அடித்துக்கொன்று கல்குவாரியில் வீசிய மனைவி!

சொத்திற்காக கணவனை அடித்துக்கொன்று கல்குவாரியில் வீசிய மனைவி!

webteam

சொத்திற்காக கணவனை அண்ணனுடன் இணைந்து கொலை செய்த மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை மாங்காடு அடுத்த கோவூர், மேற்கு மாட வீதி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(37), முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்த இவர், சொந்தமாக லாரிகள் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் தனது மகன், மருமகள், பேரப்பிள்ளைகளை காணவில்லை என பாஸ்கரின் தாய் மோகனாம்பாள் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொலை செய்யப்பட்ட பாஸ்கர் 

புகாரின் அடிப்படையில் மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பூட்டிக்கிடந்த பாஸ்கர் வீட்டை ஆய்வு செய்த போது, வீடு வெளிப்புறம் பூட்டிக்கிடந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வீட்டை உடைத்து பார்த்த போது துர்நாற்றம் வீசியுள்ளது. அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் உஷா ஒரு மூட்டையை எடுத்துச் சென்று அருகில் உள்ள குளத்தில் வீசுவது போன்ற காட்சியும், பாஸ்கரை ரத்த காயங்களுடன் காரில் ஏற்றி செல்வது போன்ற காட்சியும் பதிவாகி இருந்தது. மூட்டையை எடுத்து பார்த்தபோது அதில் ரத்தக்கறை படிந்த தலையணை, பெட்சீட் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் இன்று காலை சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் காணாமல்போன பாஸ்கரின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. பாஸ்கரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் பாஸ்கருக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதும், அதனை அபகரிக்கும் நோக்கில் உஷா மற்றும் அவரது அண்ணன் பாக்கியராஜ் ஆகியோர் பாஸ்கரை வீட்டில் வைத்து அடித்துக்கொலை செய்து கை, கால்களை கட்டி கல்குவாரியில் வீசியதும், கொலையை மறைக்க ரத்தக்கறை படிந்த பெட்ஷீட் மற்றும் தலையணைகளை எடுத்து சென்று குட்டையில் வீசி விட்டு அறை முழுவதும் ரூம் ஸ்ப்ரே அடித்து விட்டு குழந்தைகளுடன் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. மேலும் தப்பிச் சென்ற உஷா, வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள், லாரி சாவிகள், கார் சாவி, நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.