இறந்துபோன பிரவீனுடன் லலிதா file image
குற்றம்

உறங்கி கொண்டிருந்த கணவர் மீது பாம்பைவிட்டு கொலைசெய்த மனைவி; சடலத்தின் நிறம் மாறியதால் உண்மை அம்பலம்!

PT WEB

தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி அருகே உள்ள மார்கண்டேய காலணியைச் சேர்ந்தவர் பிரவீன் (42). இவரது மனைவி லலிதா (34) இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பத்திரிகையாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய பிரவீன் ரியல் எஸ்டேட், வியாபாரம், கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மந்தமரி பகுதியைச் சேர்ந்த லலிதாவைத் திருமணம் செய்துள்ளார். தொழில் நிமித்தமாகப் பல இடங்களுக்குச் சென்று வந்த பிரவீன் கோதாவரிகனி பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.

இந்த விஷயம் லலிதாவிற்குத் தெரியவந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்ப தகராறு காரணமாக பிரவீன் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்ததாகத் தெரிகிறது. மதுபோதைக்கு அடிமை அடிமையான பிரவீன் மனைவி, மற்றும் பிள்ளைகளைச் சரிவரக் கவனிக்காமலிருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த லலிதா கணவனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

இந்தநிலையில் பிரவீனிடம் வேலை பார்த்து வரும் ராமகுண்டம் ஹவுசிங் போர்டு காலணியைச் சேர்ந்த சுரேஷ் (37) என்பவரிடம் தன் கணவரின் நடத்தை குறித்தும் குடும்ப பிரச்சனையைக் கூறி கணவனைக் கொலை செய்ய உதவி கேட்டுள்ளார். பயந்து போன சுரேஷ் முதலில் ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். பின்னர் லலிதா அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு பிளாட் இலவசமாகத் தருவதாகக் கூறியுள்ளார். இதில் மயங்கிப்போன சுரேஷ் கொலை செய்யச் சம்மதித்துள்ளார்.

இதனையடுத்து சுரேஷ் தனது நண்பர்களான சதீஷ் (25), மந்தமரியை சேர்ந்த நன்னபராஜு சந்திரசேகர் (38), பீமா கணேஷ் (23) மாசு ஸ்ரீனிவாஸ் (33) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளனர். அவர்கள் செலவு செய்வதற்குப் பணத்தை லலிதா கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரவீன் வழக்கம் போல் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். அப்போது லலிதா சுரேஷை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த சுரேஷ் மற்றும் நண்பர்கள் உறங்கிக்கொண்டிருந்த பிரவீனின் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். பிரவீன் சாகவில்லை என்பதை உறுதி செய்த அவர்கள் தாங்கள் ஏற்கனவே முடிவு செய்து கொண்டு வந்த பாம்பை விட்டுக் கடிக்க வைத்துள்ளனர். பின்னர் பிரவீன் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் தங்க செயின்

இதனைத்தொடர்ந்து பிரவீன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். உடலை இறுதிச் சடங்கு செய்வதற்காக குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளனர். பிரவீனின் உடலில் பாம்பு கடித்ததால் விஷம் உடலில் ஏறி நிறம் மாறியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிரவீன் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் பிரவீன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பயந்து போன லலிதா கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து லலிதா, சுரேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் அனைவரின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், 6 செல் போன்கள், 5 சவரன் தங்கச் செயின் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.