திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்திலிருந்து அரிவாளுடன் வருவதுபோல் டிக் டாக் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் துணை ஆய்வாளர் வாசுதேவன். இவர் நேற்றைய தினம் 144 தடை உத்தரவு காரணமாக ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் கைப்பேசியில் ஒரு வீடியோ வந்தது. அதைப் பார்த்தபோது திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திலிருந்து வாலிபர் ஒருவர் வருவது போலவும், பெரிய அரிவாளுடன் நிற்பது போலவும் காட்சிப் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இவர் உடனடியாக இந்த வீடியோ குறித்து ஆய்வாளர் முனி சேகரிடம் தகவல் அளித்தார். ஆய்வாளரின் உத்தரவுப் படி துணை ஆய்வாளர் மற்றும் போலீசார் வீடியோவில் உள்ள நபர் யார் இந்த வீடியோவை அனுப்பியது யார் என்பதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரவர்மா என்ற வாலிபர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் ஏன் அப்படி போலீஸ் குறித்துவீடியோ வெளியிட்டாய் என போலீஸார் விசாரித்த போது, எங்கள் மீது அடிக்கடி வழக்குப் பதிவு செய்வதால் தான் அந்த வீடியோவை வெளியிட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் மகேந்திரவர்மன் மீது காவல்துறை குறித்து அவதூறான வீடியோ வெளியிட்டதாக வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரைக் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். இதனிடையே அவருக்கு உடந்தையாக இருந்ததாகப் பிரபாகரன்,மற்றும் ஸ்டீபன் இரண்டு பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.