குற்றம்

ஏடிஎம் கார்டை திருடி 1 லட்ச ரூபாய் பணம் எடுத்த திருடன் : திருட்டு பற்றிய திடுக் தகவல்கள்

ஏடிஎம் கார்டை திருடி 1 லட்ச ரூபாய் பணம் எடுத்த திருடன் : திருட்டு பற்றிய திடுக் தகவல்கள்

Veeramani

ஆடை வடிவமைப்பாளரின் ஏடிஎம் கார்டை திருடி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை நூதன முறையில் திருடிய திருடனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏடிஎம் மிஷினில் இருந்து பின் நம்பர் தெரியாமல் திருடியது எப்படி?

சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரபல துணி கடை உள்ளது. இங்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர் கடந்த 2ம் தேதியன்று தனது அலுவலகத்துக்கு பணிக்கு சென்றார்.  அப்போது அவரது இருசக்கர வாகனத்தின் பின் பகுதியில் தனது ஏடிஎம் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் மற்றும் இதர அடையாள அட்டைகள் அடங்கிய பணப்பையினை வைத்திருந்தார்.

பணிக்கு காலதாமதமாக வந்ததால் அவசரத்தில் வாகனத்தை சரியாக பூட்டாமல் வேலைக்கு சென்று விட்டார். அவர் பணியில் இருந்தபோது மாலையில் அவரது செல்போனுக்கு வரிசையாக குறுஞ்செய்தி வந்தன. அதில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஏடிஎம் கார்டு மூலம் ரூ. 10 ஆயிரம் வீதம் 10 முறை மொத்தமாக 1 லட்சம் ரூபாய் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அவர் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அடையாறு துணை ஆணையர் விக்ரமன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் ஏடிஎம் கார்டை திருடி அதில் இருந்து பணத்தை  எடுத்திருப்பது தெரிய வந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் பணம் திருடப்பட்ட ஏடிஎம் மையத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொப்பி கண்ணாடி அணிந்தபடி வந்து ஏடிஎம் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றி பைக் எண்ணை வைத்து திருடனை போலீசார் கண்டுபிடித்தனர். குரோம்பேட்டை நாகல்கேனி பகுதியைச் சேர்ந்த முகம்மது இம்ரான் (39) என்பவது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இம்ரான் மீது குரோம்பேட்டை காவல் நிலையத்தில் 2017ம் ஆண்டு நகைப்பறிப்பு வழக்கு இருப்பது தெரியவந்தது.

ஏடிஎம் ரகசிய குறியீட்டு எண் (பின் நம்பர்) தெரியாமல் பணத்தை திருடியது எப்படி என்பது தொடர்பாக கைதான இம்ரானிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த பெண்ணின் பைக்கை உடைத்து திருடியதில் ஏடிஎம் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், அடையாள அட்டைகள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டு கிடைத்ததால் ஏடிஎம் மூலம் பணத்தை திருட இம்ரான் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். பின் நம்பர் கேட்டதால் அவருக்கு தெரியவில்லை. அப்போது வங்கிக் கணக்கு புத்தகத்தோடு ஏடிஎம் கார்டு முதன் முதலில் வங்கியில் இருந்து அனுப்பிய பின் நம்பர் இருந்துள்ளது. அதில் உள்ள எண்ணை ஏடிஎம் மிஷினில் கைதான இம்ரான் பதிவிட்டுள்ளார். ஆனால் அது தவறு எனக் காட்டி உள்ளது. பிறகு அந்த பெண்ணின் அடையாள அட்டை ஒன்றில் இருந்த பிறந்த வருடத்தை எடுத்து ஏடிஎம் மிஷினில் பதிவிட்டபோது அது சரியாக காட்டியதால் மகிழ்ந்துபோன திருடன் இம்ரான் ரூ. 10 ஆயிரமாக ரூ. 1 லட்சம் வரை திருடி விட்டு தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

அதிர்ஷ்டத்தில் கிடைத்த ரகசிய குறியீட்டை எண்ணை வைத்து திருடிய திருடன் இம்ரானிடமிருந்து ஏடிஎம் கார்டு மூலம் திருடப்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ரோட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனத்தின் சீட்டின் பூட்டை உடைத்து அதில் வைக்கப்பட்டிருக்கும் பணம் மற்றும் பொருளை திருடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு பிறகு இம்ரானை போலீசார்  நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தந்த அடையாறு காவல்துறைக்கு அந்தப் பெண் நன்றி தெரிவித்தார். 

"பொதுவாக ஏடிஎம் கார்டு பின் நம்பரை கார்டு வைத்திருக்கும் பர்சில் எழுதி வைப்பது, துண்டு சீட்டில் எழுதி வைப்பது எல்லாம் தவறான செயல் என்றும், சுலபமாக யார் வேண்டுமானாலும் ஏடிஎம் பின் நம்பரை கண்டுபிடிக்கும்படி வைக்கவும் கூடாது என்றும்" அடையாறு காவல்துறை துணை ஆணைர் விக்ரமன் அறிவுறுத்தி உள்ளார்.