வேலூரில் கழிவுநீர் கால்வாயில் கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதிக மக்கள் நடமாட்டம் இல்லாமல் நாடே வெறிச்சோடிப் போய் உள்ளது. கூகுள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி நாட்டில் 80 சதவீதம் அளவுக்கு மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப் போக்குவரத்து இல்லாததால் மக்கள் ஒரே இடத்தில் முடங்கிப் போய் உள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வருகிறார்கள். ஆகவே நாடு முழுவதும் குற்றச் செயல்கள் குறைந்துள்ளன. அதே நேரம் வீட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கழிவுநீர் கால்வாயிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் அம்பேத்கர் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயைச் சுத்தப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கால்வாயில் பழைய கைத்துப்பாக்கி ஒன்று இருப்பது தெரியவந்தது. இது குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.
நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி அலுமினியத்தால் ஆன போலி துப்பாக்கி என்ற தகவலும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அத்துப்பாக்கி அடுத்த கட்ட ஆய்வுக்காக வேலூர் காவல் ஆயுதப் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.