குற்றம்

PT செய்தி எதிரொலி: திருச்சியில் முடிவுக்கு வந்தது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை

PT செய்தி எதிரொலி: திருச்சியில் முடிவுக்கு வந்தது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை

webteam
திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதை புதியதலைமுறை கள ஆய்வில் வெளிக்கொண்டு வந்தது. செய்தி வெளியான 30 நிமிடத்தில் திருச்சி மாநகர பொன்மலை சரக காவல் உதவி ஆணையர் காமராஜ் தலைமையின போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 பேரை கைது செய்தனர்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை அருகிலுள்ள விவேகானந்தா நகர் வாத்தியார் குளத்திற்கு அருகேயுள்ள ஒரு மளிகை கடையிலும், அதன் எதிர்ப்புறம் உள்ள முட்புதரிலும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வந்ததாக புகார்கள் வந்தன. இதேபோல இதற்கு அருகாமையில் இருந்த சுடுகாட்டுக்கு அருகே பாழடைந்த கட்டிடத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இரயில்வே ஊழியர்களும், அந்த பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பணியாற்றக்கூடிய விவசாயக் கூலித் தொழிலாளர்களும், ஆட்டோ ஓட்டுனர்களும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். இதில் ஒரு இடத்தில் மட்டும், தினசரி சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது.
திருச்சி மாநகர சரகத்துக்கு உட்பட்ட அரியமங்கலம் காவல் நிலையம்,  பொன்மலை காவல் நிலையம், மாவட்ட புறநகர் பகுதியில் உள்ள திருவெறும்பூர் காவல் நிலையம் ஆகியவற்றில் எல்லையின் நடுவே இந்த இடம் அமைந்துள்ளதால், சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்யக்கூடியவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
30 ரூபாய், 60 ரூபாய், 120 ரூபாய் என மூன்று கட்டணங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 30 ரூபாய் லாட்டரி சீட்டுக்கு 10,000 ரூபாயும், 60 ரூபாய் லாட்டரி சீட்டுக்கு 25 ஆயிரம் ரூபாயும், 120 ரூபாய் லாட்டரி சீட்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. தினமும் காலை 8 மணி முதல் லாட்டரி சீட்டு விற்பனை தொடங்குகிறது. மதியம் 2 மணிக்கு குழுக்கள் முடிவடைந்த பிறகு யாருக்கு பரிசு விழுந்துள்ளது என்பதை அறிவிக்கின்றனர். அதனடிப்படையில் ஆயிரம் ரூபாய் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு பரிசு தொகையை லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர்களை வழங்கி விடுகின்றனர்.
புதிய தலைமுறை இதை அம்பலப்படுத்தியதை அடுத்து, அந்த செய்தியின் எதிரொலியாக இந்த சட்டவிரோத நடவடிக்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.