தி.நகர் நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகளை போலீசார் மீட்டனர். தலைமறைவாக இருந்த கொள்ளையனை அவனது மீசையே காட்டிக் கொடுத்துள்ளது.
சென்னை தி.நகர் மூசா தெருவில், ராஜேந்திர குமார் என்பவருக்கு சொந்தமான உத்தம் ஜுவல்லரி என்ற நகைக்கடை உள்ளது. இங்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி கிரில்கேட் பூட்டை உடைத்து ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை தொடர்பாக துப்புதுலக்க கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கமிஷனர் தினகரன், திநகர் துணைக்கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் உதவிக் கமிஷனர்கள் கலியன், மகிமைவீரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்களில் ஒருவன் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளி அப்பு என்கிற வெங்கடேசன், கங்காதேவி, அமல்ராஜ் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். சுரேஷின் காதலி கங்காவிடம் விசாரணை நடத்தி போலீசார் அவர் தனது வீட்டின் பின்புறத்தில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்டனர்.
தி.நகர் கொள்ளை சம்பவம் நடந்த மூசா தெருவில் தொடங்கி திருவள்ளூர் புட்லூர் வரை சுமார் 400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பின்தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொள்ளையன் முகக்கவசம் அணிந்திருந்தான். சிசிடிவி பதிவில் ஒருசில நொடியே முகக் கவசத்தை அகற்றி விட்டு மீண்டும் மாட்டும் காட்சி பதிவாகி இருந்தது.
அப்போது அவனது கண், மூக்கு, மீசை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. அதை வைத்து பழைய கொள்ளையர்களின் படத்தோடு ஒப்பிட்டு பார்த்த போது தான் கோடம்பாக்கம் கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ் என உறுதிப்படுத்தினர். சுரேஷ், வெங்கடேசன் இருவரும் கண்ணகி நகரில் ஒரு பைக்கை திருடி அதில் தி.நகர் வந்துள்ளனர். இரும்பு கிரில்கேட்டை உடைப்பதற்கு கடப்பாரை உள்ளிட்ட இரும்புப் பொருட்களை அமல்ராஜ் கொடுத்துள்ளார்.
தி.நகரில் கொள்ளையை முடித்ததும் நகைகளுடன் ஒரு ஆட்டோவில் ஏறி மார்க்கெட் சுரேஷ், அமல்ராஜ், வெங்கடேசன் மூவரும் திருவள்ளூர் புட்லூரில் உள்ள கங்காதேவி வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு நகைகளை பங்கு போட்டதும் அமல்ராஜும், வெங்கடேசும் ஆட்டோவில் திருவண்ணாமலை சென்று விட்டனர்.
பின்னர் சுரேஷ் அங்கிருந்து சென்று தலைமறைவாகி விட்டார். அந்த சமயத்தில்தான் சென்னை போலீசார் கங்காதேவியை கண்டுபிடித்து புட்லூருக்கு சென்று கைது செய்தனர். கங்காதேவியை பார்ப்பதற்காக சுரேஷ் வந்தபோது அங்குள்ள வியாபாரிகள் அவனை பிடித்து திருவள்ளூர் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் கங்காதேவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வீட்டில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த அமல்ராஜ், வெங்கடேசன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு அவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகளும் மீட்கப்பட்டது. மார்க்கெட் சுரேஷின் வழக்கறிஞர் ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவருக்கு வக்கீல் பீஸாக வைர கம்மல் ஒன்றை சுரேஷ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையர்களை கண்டுபிடித்து கைது செய்த மாம்பலம் உதவி ஆணையர் கலியன், வளசரவாக்கம் உதவி ஆணையர் மகிமை வீரன் உள்பட தனிப்படை போலீசாரை பாராட்டிய கூடுதல் ஆணையர் தினகரன் வெகுமதி வழங்கினார்.