குற்றம்

பட்டாக்கத்தி முனையில் மதுபாட்டில்கள் கொள்ளை - தப்பியோடிய நபர்களை விரட்டி பிடித்த போலீசார்

பட்டாக்கத்தி முனையில் மதுபாட்டில்கள் கொள்ளை - தப்பியோடிய நபர்களை விரட்டி பிடித்த போலீசார்

kaleelrahman

பூந்தமல்லியில் பட்டாக் கத்தியை சுழற்றி டாஸ்மாக் பாரில் இருந்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் தூக்கி சென்றனர். அவர்களை பிடிக்க சென்ற போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடிய நிலையில், மீண்டும் விரட்டி சென்று போலீசார் அவர்களை கைது செய்தனர்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி பகுதியில் ஒரே இடத்தில் 5 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் மாலை 5 வரை மட்டும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் பார்கள் செயல்பட அனுமதி இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு இந்த பகுதியில் உள்ள பார்களில் கள்ள சந்தையில் சிலர் மதுபானங்களை விற்று வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டாக் கத்தியை எடுத்து சுழற்றி உள்ளனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர், அந்த நபர்கள் அங்கிருந்து ஒருபெட்டி மது பாட்டில்கள் மற்றும் மதுவை விற்று கொண்டிருந்த நபரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார், அவர்கள் கூறிய அடையாளத்தின் படி கரையான்சாவடியில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது போலீசாரை தள்ளிவிட்டு ஓடிய அந்த நபர்கள் அங்கிருந்த வீட்டினுள் நுழைந்தனர். விடாமல் விரட்டிச் சென்ற போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மதுபாட்டில்கள் மற்றும் பட்டாக்கத்தி வைத்திருந்தனர்.

அந்த வீட்டின் கதவை வெளியே சாத்திய போலீசார், கூடுதல் போலீசாரை வரவழைத்து வீட்டிற்குள் இருந்த குமணன்சாவடியை சேர்ந்த முபாரக், ரபிக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்ற சம்பவம் இருப்பது தெரியவந்தது. மேலும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பாரில் வேலை செய்யும் நபரை தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டதால் ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரரை அங்குவந்த கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது.

தற்போது ஊரடங்கு நேரத்திலும் பூந்தமல்லி பகுதியில் கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.