குற்றம்

கியர் வண்டி ஓட்டத்தெரியாததால் ஸ்கூட்டிகளை திருடும் கொள்ளையன்

கியர் வண்டி ஓட்டத்தெரியாததால் ஸ்கூட்டிகளை திருடும் கொள்ளையன்

webteam

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த நான்கு ஸ்கூட்டி பெப் வாகனங்கள் அடுத்தடுத்து திருடு போயின. இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். வாகனம் காணாமல் போன இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாமல் இருப்பது தெரியவந்தது.பின்னர் திட்டமிட்டு அந்த திருடன் சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதிகளில் தனது கைவரிசையை காட்டிவந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

இந்நிலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க மயிலாப்பூர் ஆய்வாளர் செந்தில் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஏற்கனவே இதுபோன்று குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலை போலீசார் ஆய்வு செய்ததில் சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கியர் இல்லாத வாகனங்களான ஸ்கூட்டி, டிவிஎஸ் எக்ஸ்எல் போன்ற வாகனங்களை குறி வைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். பெரிய வண்டிகளின் பூட்டை உடைப்பது கடினம் என்பதால் இந்த வழியை அவர் தேர்ந்தெடுத்திருப்பது வழக்கம் என்பதால் ஹரிஹரனைப் பற்றி தீவிர விசாரைண நடத்தினர்.

இதனையடுத்து திருடன் எங்கு இருக்கிறான் என விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், ஹரிஹரனின் செல்போன் மூலம் மயிலாப்பூர் பகுதியில் வைத்து போலீசார்  மடக்கிப்பிடித்தனர். பின் அவனிடம் விசாரணை நடத்தியதில் அவன் பல அதிர்ச்சி தகவல்களை போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதில் சென்னை தேனாம்பேட்டை நல்லான் தெருவைச் சேர்ந்த ஹரிகரன் (54). ரயில்வே கேன்டீனில் வேலைபார்த்து வந்துள்ளார். 10ம் வகுப்பு வரை படித்த இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருட்டு தொழில் செய்து வருகிறார்.

ஹரிகரனுக்கு கியர் வண்டி ஓட்டத் தெரியாததால் கியர் இல்லாத வாகனங்களின் பூட்டை உடைத்து திருடுவார். அந்த வகையில் ஹரிகரனுக்கு பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டி பெப் வாகனத்தை திருடுவது எளிதான வேலையாக இருந்தது. ஸ்கூட்டி பெப் வாகனத்தின் பூட்டை உடைப்பதற்கென்றே இரும்பு கள்ளச்சாவி ஒன்றை பிரத்யேகமாக செய்து தனது பேன்ட் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருப்பார். திருடும் ஸ்கூட்டிகளை வீட்டில் கொண்டு போய் நிறுத்தினால் சந்தேகம் வரும் என்பதால் ரயில் நிலைய இருசக்கரவாகன பார்க்கிங்கில் போட்டு விட்டு, பின்னர் அந்த வாகனத்துக்கு போலி ஆர்சிபுத்தகம் தயார் செய்து 2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 3 ஆயிரம் வரை விற்றுவிடுவார்.

அவனிடமிருந்து 20 ஸ்கூட்டி பெப் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் அனைத்தையும் சென்னை, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை முதல் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் வரை அங்குள்ள டூ வீலர் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்துள்ளார். கிட்டத்தட்ட ரயில் நிலைய பார்க்கிங்கை தனது திருட்டு வாகனங்களை நிறுத்தி வைக்கும் ஷோரூமாக ஹரிகரன் பயன்படுத்தி வந்துள்ளார். வண்டி விற்பனைக்கு வரும் போது அதனை  ரயில் நிலைய பார்க்கிங்கில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து பணத்தை வாங்கிக் தப்பி சென்று விடுவார். 

ஹரிஹரன் மீது சைதாப்பேட்டை, கேகே நகர், அசோக் நகர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் சுமார் 60 திருட்டு வழக்குகள் உள்ளன. 30-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏற்கனவே போலீசார் ஹரிகரனிடமிருந்து பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 வண்டிகளை ஹரிகரன் திருடியுள்ளதாக வாக்குமூலம் அளித்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கைதான ஹரிகரனை மயிலாப்பூர் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.