குற்றம்

போதையில் வந்ததால் பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்.. விரக்தியில் அன்பக ஆஃபிஸ் ஊழியர் தற்கொலை!

போதையில் வந்ததால் பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்.. விரக்தியில் அன்பக ஆஃபிஸ் ஊழியர் தற்கொலை!

webteam

சென்னையில் மதுபோதையில் வந்த இளைஞரின் இரு சக்கர வாகனத்தை ரோந்து போலீசார் பறிமுதல் செய்ததை அடுத்து விரக்தியில் அந்த இளைஞர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் கன்னியம்மாள் தெருவைச் சேர்ந்தவர் நிசாந்த். இவர் தேனாம்பேட்டையில் உள்ள திமுக அலுவலகமான அன்பகத்தில் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டாராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில்  நிசாந்த் நேற்று காசி திரையரங்கம் அருகே உள்ள தனது நண்பர் வீட்டில் மது அருந்தியுள்ளார்.  அதன் பின் வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது காசி திரை அரங்கம் அருகில் ரோந்து பணியில் இருந்த போலீசார் பார்த்திபன் மற்றும் கார்த்திக் ஆகியோர் நிசாந்திடம் விசாரணை செய்துள்ளனர். அவர் மது அருந்தியது போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து நிசாந்தின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த நிசாந்த் தனது மனைவி அஃப்ரினிடம் நடந்தவற்றை எல்லாம் கூறி புலம்பியுள்ளார். அதற்கு அவரது மனைவி காலையில் பணத்தை கட்டி இரு சக்கர வாகனத்தை மீட்டுவிடலாம் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அஃப்ரின் திடீரென விழித்த போது தனது கணவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இது குறித்த தகவல் எம்.ஜி.நகர் போலீசாருக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து நிசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.