குற்றம்

பெண்ணின் முடியை பிடித்து இழுத்து தாக்குதல்: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்

பெண்ணின் முடியை பிடித்து இழுத்து தாக்குதல்: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்

webteam

பூந்தமல்லி அருகே சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த நபர் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் குமாரி என்பவர் டீ மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வரும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் உணவுகளை சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் அராஜகத்தில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து குமாரி அந்தப் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அராஜகத்தில் ஈடுபடுபவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக கடைக்குள் அவர்களுக்கு தெரியாமல் கண்காணிப்பு கேமரா ஒன்றையும் வைத்துள்ளார்.

இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா இருப்பது தெரியாமல் வழக்கம்போல் அங்கு சென்ற சிலர் உணவுகளை வாங்கியுள்ளனர். வாங்கிய உணவிற்கு குமாரி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர்கள் ஆத்திரமடைந்து கடைக்குள் சென்று குமாரியின் தலைமுடியை பிடித்து இழுத்து அடிக்க முற்பட்டனர். இதையடுத்து அங்கிருந்த சிலர் தடுத்து விடுகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.