குற்றம்

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை அரிவாளுடன் ஓட ஓட விரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் கைது

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை அரிவாளுடன் ஓட ஓட விரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் கைது

webteam

கடன் கொடுத்ததை திருப்பிக் கேட்டவரை ஓட ஓட அரிவாளால் வெட்ட முயன்ற தி.மு.க கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் நித்தியா. இவரது கணவர் வெற்றிச் செல்வன் அதேபகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார்.

இந்நிலையில், வெற்றிச் செல்வன் கடனை திருப்பிக் கொடுக்காமல் குணசேகரனை அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த குணசேகரன் வெற்றிச் செல்வன் வீட்டிற்குச் சென்று கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்த வெற்றிச் செல்வன் குணசேகரனை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து குணசேகரனை வெட்ட முயன்றுள்ளார். இதனைக் கண்ட குணசேகரனின் உறவினர்கள் சிலர் வெற்றிச் செல்வனை தட்டிக் கேட்கவே மேலும் ஆத்திரமடைந்த அவர், குணசேகரன் மற்றும் அவரது உறவினர்களை ரோட்டில் ஓட ஓட துரத்தி அரிவாளால் வெட்ட முயன்றார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுகனூர் காவல் நிலையத்தில் குணசேகரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வெற்றிச் செல்வன் மீது சிறுகனூர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி வெற்றிச் செல்வனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.