சுக்ஜீத் சிங் வழக்கு  முகநூல்
குற்றம்

“அப்பாவின் தலையில் தலையணையை வச்சு அம்மா அமுக்கினாங்க”.. கண் முன் நடந்த கொலை.. சாட்சியான 9 வயது மகன்!

35 வயது சுக்ஜீத் சிங் என்பவரின் மனைவி ராமன்தீப் கவுர் மான் என்பவர் தன் 9 வயது மகனின் கண்முன்னே தனது ரகசிய காதலனின் உதவியுடன் கொலை செய்த சம்பவம். அதற்கு சாட்சியாக மாறிய 9 வயது மகன்.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தர பிரதேசம் நீதிமன்றம் ஒன்று கணவரை மனைவியே கொன்ற வழக்கில் குற்றத்தை உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் தாயின் தண்டனைக்கு காரணமாக அவரது மகனின் சாட்சியே அமைந்தது. 7 வருடங்களுக்கு முன்பு உண்மை வெளிவந்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் ராமந்தீப் கவுர் மான். இவரது கணவர் சுக்ஜீத் சிங். இவர் வெளிநாடு வாழ் இந்தியராக பிரிட்டனில் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 6 வயது மற்றும் 9 வயது கொண்ட இரண்டு குழந்தைகள் இருந்தது. இவர்கள் பிரிட்டனில் வசித்து வந்தனர். இந்த நிலையில்தான், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுக்ஜீத் சிங் கடந்த 2016 ம் ஆண்டு செப்டம்பட் 2ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தப்பட்ட வழக்கு ஷாஜஹான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதாவது சுக்ஜீத் சிங்கை அவரது மனைவி தனது ரகசிய காதலனான குர்ப்ரீத் சிங்கின் உதவியுடன் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

பிளான் பண்ணி கொலை!

ராமந்தீப் கவுர், குர்ப்ரீத் சிங் இந்த கொலையை நிகழ்த்த நீண்ட காலமாக திட்டமிட்டிருக்கிறார்கள். தங்களது திட்டத்தை சாத்தியப்படுத்த தனது 2 குழந்தைகள் மற்றும் கணவரை தனது சொந்த ஊரான உத்திர பிரதேசத்தின் ஷாஜஹான்பூருக்கு அழைத்து செல்ல நினைத்த அவர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். ஒரு மாத காலம் உத்தரப்பிரதேசத்தில் இருக்குமாறு குடும்பத்துடன் வந்துள்ளனர்.

இதற்காக குடும்பத்துடன் ஷாஜஹான்பூருக்கு செல்லும் வழியில் அவரது குழந்தை பருவ நண்பர் அதாவது தற்போது காதலரான பஞ்சாப்பில் கபுர்தலாவைச் சேர்ந்த குர்ப்ரீத்பையும் அவர்களுடன் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்.

அன்று நடந்தது என்ன?

ராமந்தீப் கவுர் தனது கணவர் சுக்ஜீதின் சிங்கை கொலை செய்வதற்காக முழு குடும்பதிற்கும் அன்றிரவு தயார் செய்யபட்ட உணவில் விஷம் கலந்து கொடுத்து இருக்கிறார். ஆனால் இந்த உணவை இவர்களின் 9 வயது நிரம்பிய மூத்த மகன் மட்டும் சாப்பிடவில்லை. விஷமருந்திய உணவை அருந்திய தனது கணவரை தனது ரகசிய காதலனின் உதவியுடன் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். இச்சம்பவத்தை இவர்களின் 9 வயது சிறுவன் நேரில் கண்டுள்ளான்.

சுக்ஜீத் சிங் வழக்கு

கொலை வழக்கில் தாய்க்கு எதிராக சாட்சியாக மாறிய மகன்! 

இது குறித்து அச்சிறுவன் கூறுகையில், “ என் அப்பா ரொம்ப நல்லவர். ஆனா என் அம்மா ரொம்ப கெட்டவர். என் கண்களுக்கு முன்பாகவே என் அப்பாவை கொன்ற என் அம்மாவின் முகத்தை நான் பார்க்க கூட விரும்பவில்லை. அவர் என் அப்பாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினார். அப்பொழுது குர்ப்ரீத்தை அழைத்து என் அப்பாவின் கழுத்தில் அறுக்கும் படி கூறினார்” என்று தெரிவித்தார்.

இந்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து அவ்வழக்கின் வழக்குரைஞர் அசோக் குமார் கன்னா கூறுகையில், ”ஷாஜஹான்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பங்கஜ் குமார் ஸ்ரீவஸ்தவா அவர்கள் IPC பிரிவுகள் 302 மற்றும் 34 இவற்றின் கீழ் ராமன்தீப் மற்றும் குர்ப்ரீத் ஆகியோரை குற்றவாளிகள் என்று அறிவித்து, இவ்வழக்கிற்கான தீர்ப்பை அக்டோபர் 7 ஆம் தேதி தள்ளிவைத்து இருக்கிறார்.

மேலும், ஆயுத சட்டத்தின் 4/25 பிரிவின் கீழ் குப்ரீத் குற்றவாளி என்று தீர்ப்பிடப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல இறந்தவரின் 9 வயது மகனனின் கண் முன்னே அவரது தந்தையின் கழுத்தை அறுப்பது என்பது மிகவும் அரிதான செயல். மேலும் இவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ”நானும் ராமன்தீப்பும்
அவரை கொலை செய்துவிட்டு உத்திர பிரதேசத்திலிருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தோம்” என்று கூறினார்.

இறந்த சுக்ஜீத்தின் 75 வயதான தாயார் இது குறித்து கூறுகையில் “எனது உடல்நிலை சரி இல்லாத போது நான் இப்போது வழுவாக நிற்கிறேன். என் மகனுக்கு இழைக்கப்பட்டது அநீதி. அவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்று தெரிவித்தார்.