குற்றம்

தமிழகத்தை உலுக்கிய சிபிஐ வசம் உள்ள முக்கிய வழக்குகள்: தற்போதைய நிலை என்ன?

தமிழகத்தை உலுக்கிய சிபிஐ வசம் உள்ள முக்கிய வழக்குகள்: தற்போதைய நிலை என்ன?

webteam

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கிளைச் சிறையில் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், சிபிஐ வசம் உள்ள தமிழகத்தை அதிரவைத்த சில முக்கிய வழக்கு குறித்த விவரங்களை பார்க்கலாம்.

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம், காலை நடைப்பயிற்சிக்கு சென்றபோது வெட்டி கொலை செய்யப்பட்டார். சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கை ராமஜெயம் மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில் நிலுவையில் உள்ளது.

பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா கடந்த 2015-ல் தான் தங்கியிருந்த வீ்ட்டில் தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால், விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. போதிய ஆதாரம் இல்லாததால் கோவை சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தனது மகள் விஷ்ணுபிரியாவின் லேப் டாப், செல்போன், டேப் ஆகியவற்றில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக அவரது தந்தை ரவிக்குமார் நாமக்கல் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார். விசாரணை நிலுவையில் இருக்கிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு செங்குன்றத்தில் உள்ள குட்கா கிட்டங்கில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது கிடைத்த ரகசிய டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை முன்னாள் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது. 2018-ல் சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவ் ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா மற்றும் 3 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் கைதான 6 பேர் தவிர, அமைச்சர் பெயரோ காவல்துறை அதிகாரிகள் பெயரோ இடம்பெறவில்லை. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. 2-வது குற்றப்பத்திரிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை இல்லை. வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. கைதான அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.

கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வழக்கு ஆகஸ்டு மாதம் சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தமிழக காவல்துறை 207 வழக்குகளை பதிவு செய்திருந்தது. அதுவும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய சிபிஐ, 2 அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகை இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. கைதான 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு 2019 மார்ச் மாதம் வழக்கு சிபிஐக்கு தமிழக அரசே மாற்றியது. ஏப்ரல் மாதம் இந்த வழக்கு தொடர்பாக 2 வழக்குகளை பதிவு செய்தது. சம்பவ இடத்திற்கு சென்றும் விசாரித்தது. மே மாதம் கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தனர். வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 5 பேருக்கும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, மாணவியின் தந்தை புகார் அளித்தார். இந்த வழக்கு 2019 டிசம்பர் மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டது.

பாத்திமா லத்தீப் மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என சர்ச்சை கிளம்பியது. சந்தேக மரணத்திற்கு ஐஐடி பேராசிரியர் ஒருவர் காரணம் என தந்தை குற்றம் சாட்டினார். ஆனால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றே கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை.