புதுக்கோட்டை  pt
குற்றம்

”இரட்டை குவளை முறை போன்ற கொடுமைகள் இல்லையென நிரூபிக்க முடியுமா?” - தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

PT WEB

இரட்டை குவளை முறை, திருமண மண்டபங்களை பயன்படுத்த விடாமல் தடுப்பது, பொது குளத்தை பயன்படுத்த அனுமதிக்காமல் இருப்பது போன்ற எவ்விதமான தீண்டாமை சம்பவமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவில்லை” என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதா?

புதுக்கோட்டை கரம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நீரை அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதுசார்ந்த வழக்கு முறையாக விசாரிப்படுவதாக தெரியவில்லை.

புதுக்கோட்டையில் இரட்டை குவளை முறை தற்போதும் நடைமுறையில் உள்ளது. வன்னியன் விடுதி, அரையாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள டீக்கடைகளில் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொழிஞ்சிஅம்மன் மஹால் மற்றும் எம்ஆர்பி திருமண மண்டபங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

புதுக்கோட்டை

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றுவதோடு, அந்த கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

Medical Camp

மேலும் இரட்டை குவளை முறை பயன்பாட்டை தடுப்பதோடு, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்ட திருமண மண்டபங்களை பயன்படுத்தவும், வைராண்டி கண்மாயில் குளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இரட்டைகுவளை முறை இல்லை என மறுத்த அரசு!

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ”மனுதாரர் குறிப்பிடும் சங்கன்விடுதி கிராமத்தில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர். ஏப்ரல் 25-ம் தேதி காலை 10.30மணி அளவில் அதே பகுதியில் வசித்து வரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளையராஜா என்பவர் குடிநீர் தொட்டியினுள் கிடப்பது பாசியா? சாணமா? என தொட்டியை சுத்தம் செய்தவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை

அதனை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நீரின் மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ததில், நீரில் கலந்திருந்தது பாசி என்றும் அந்த நீர் குடிப்பதற்கு உகந்தது என்றும் தெரியவந்தது. மனுதாரர் குறிப்பிடுவது போல இரட்டை குவளை முறை, திருமண மண்டபங்களை பயன்படுத்த விடாமல் தடுப்பது, பொது குளத்தை பயன்படுத்த அனுமதிக்காமல் இருப்பது போன்ற எவ்விதமான தீண்டாமை சம்பவமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா? - நீதிபதிகள் கேள்வி

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், "இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்? இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா?” என கேள்வி எழுப்பினர்.

புதுக்கோட்டை குடிநீர்த் தொட்டி

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “சமூகத்தில் நிகழும் தவறுகளை தனிநபர் சுட்டிக் காட்டினால் அதனை களைந்து சரிசெய்வதை விடுத்து சுட்டிக்காட்டிய நபர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல. தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முறையாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஒப்புகைச்சீட்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது. வழக்கின் ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும். சிபிசிஐடி போலீசார் விசாரணை அறிக்கையை ஜூன் 5-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.