குற்றம்

'மதம் மாறிவிடுவாரோ': மனைவியையும், குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர்

'மதம் மாறிவிடுவாரோ': மனைவியையும், குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர்

JustinDurai
மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கார் டிரைவராக பணியாற்றி வந்த நாகேசுக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு எற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நாகேஷின் வீட்டுக் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது நாகேஷ் தூக்கில் சடலமாக தொங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது விஜயலட்சுமி மற்றும் அவரது இரு குழந்தைகளும் இறந்து கிடந்தனர்.
 
வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் விஜயலட்சுமியை ஒரு பெண் மதம் மாற்ற முயற்சிப்பதாகவும், அதனால் மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்வதாக நாகேஷ் எழுதியிருப்பதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விஜயலட்சுமியை மதம் மாற்ற முயற்சித்ததாக கூறப்படும் பெண்ணையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
 
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)