குற்றம்

கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா? - சிசுக் கொலைக்கு காரணமான போலி மருத்துவர் கைது

கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா? - சிசுக் கொலைக்கு காரணமான போலி மருத்துவர் கைது

kaleelrahman

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என சட்டத்துக்கு புறம்பாக ஸ்கேன் செய்து பெண் சிசுக் கொலைக்கு காரணமாக இருந்த கும்பலில் ஒருவர் கைது இருவர் தப்பியோடி விட்டனர்.


திருப்பத்தூர் மாவட்டம், வெங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). போலி மருத்துவரான .இவருக்கும், திருப்பத்தூர் பகுதியில் ஸ்கேன் சென்டர் நடத்தி வரும் சுகுமார் (55) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.


இவர்கள் ஏற்கெனவே தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கூறியதால் சிறைக்கு சென்று வந்தும், தொடர்ந்து இதே வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.


இதையடுத்து இந்த தகவல் சென்னையில் உள்ள பெண் சிசு தடுப்பு பிரிவினருக்கு கிடைத்துள்ளது. தகவல் அறிந்து சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் கர்ப்பிணி பெண் ஒருவரை ஏற்பாடு செய்து தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.


அப்போது சுகுமார் மாலை நேரத்தில் தான் முடியும் மாலையில் வந்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து சுகுமார், சதிஷ் குமாரிடம் ஸ்கேன் செய்ய ஒரு பெண் வருகிறார். அதனால் அனைத்தும் தயார் நிலையில் வைக்குமாறு கூறியுள்ளார். ஸ்கேன் செய்யும் இடத்தை கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ அதிகாரிகள் கர்ப்பிணி பெண்ணிடம் மொபைல் ட்ராக் ஆப்பை கொடுத்து கண்காணித்தனர்.


இதைத் தொடர்ந்து ஒரு பெண்ணின் உதவியோடு கர்ப்பிணி பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். மொபைல் டிராக் சொல்லும் வழியை பின் தொடர்ந்த மருத்துவ அதிகாரிகள் திருப்பத்தூரை அடுத்த மொலகரம்பட்டிக்கு செல்லும் சாலையில் தனியார் திருமண மண்டபத்திற்கு பின் புறம் உள்ள சாம்ராஜ் என்பவரின் வீட்டு மேல் மாடிக்கு சென்றுள்ளனர்.


அப்போது அதிகாரிகள் வருவதை கண்டு சுகுமார் மற்றும் இளவரசி ஆகிய இருவரும் தப்பியோடியுள்ளனர். ஸ்கேன் செய்யும் போது கையும் களவுமாக சதீஷை பிடித்து ஸ்கேன் செய்யும் மெஷினையும் பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது ஸ்கேன் கருவியை அதிகாரிகள் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதற்காக கருவியை உடைத்துள்ளார்.


இதனால் ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் சதீஷை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தப்பியோடிய சுகுமார் மற்றும் இளவரசி ஆகிய இருவர் மீதும் கந்திலி காவல் நிலையத்தில் திருப்பத்தூர் தலைமை மருத்துவர் திலீபன் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.