திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் முன்பு விஷம் அருந்திய விவசாயி உயிரிழந்த நிலையில், அலட்சியம் காட்டிய பெண் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் குள்ளலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டி. சிறுமலை அடிவாரப் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தை, பள்ளபட்டியைச் சேர்ந்த சிலபேர் அச்சுறுத்தி மிரட்டி பறிக்க முயல்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டி மற்றும் அவரது மகன் சதீஷ் கண்ணன் ஆகியோர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விவசாயி பாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் பேரில், நிலக்கோட்டை நீதிமன்றம் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்வதற்கு ஆணை பிறப்பித்தும், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கு பதியாத காவல் ஆய்வாளர்! விரக்தியில் விஷம் அருந்திய விவசாயி!
இதனால் விரத்தி அடைந்த பாண்டி 7ஆம் தேதி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாத போலீசாரை கண்டித்து, கையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை அருந்தி காவல் நிலையம் முன்பு மயங்கி விழுந்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி பாண்டி, 9ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சை பலனில்லாமல் மருத்துவமனையில் பலி!
விவசாயி பாண்டி இறந்துவிட்ட நிலையில், தற்போது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சங்கர், நாச்சியப்பன், சின்ன கருப்பு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். புகார் கொடுத்தபோது வழக்கு பதிவு செய்யாமல் புகார் கொடுத்தவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ள போலீசார் மீது சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
விஷம் அருந்தியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அலட்சியமாக செல்போன் பேசிக்கொண்டிருக்கும் ஆய்வாளர்!
இந்நிலையில் காவல் நிலையம் முன்பு விவசாயி பாண்டி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் மயங்கிய நிலையில் காவல் நிலைய வாசலில் பாண்டி அமர்ந்திருப்பதும், அதன் அருகே அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி செல்போனில் பேசிக் கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது. விஷம் அருந்தி மயங்கி நிலையில் கிடக்கும் விவசாயியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் காவல் ஆய்வாளர் அலட்சியம் காட்டும் காட்சியும் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண் காவல் ஆய்வாளர் ஆயுதபடைக்கு மாற்றம்!
இதனிடைய பாண்டி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காத, அம்மைநாயக்கனுர் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமியை, திண்டுக்கல் ஆயுத படைக்கு இடமாற்றம் செய்து திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.