குற்றம்

பல பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைதான காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

webteam
கன்னியாகுமரியைச் சேர்ந்த  காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 
 
சமூக வலைத்தளங்களில் போலியாகக் கணக்குகளைத் தொடங்கி அதன் மூலம் பெண்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட காசி மீது சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அடுத்தடுத்து பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
 
 
தற்போது வரை 5 இளம் பெண்கள் புகார் கொடுத்துள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி காசியைக் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இளம் பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் ஒரு புகார் அளித்திருந்தார். 
 
புகாரின் அடிப்படையில் காசி மீது போக்சோ சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காசியால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடவும் இளம் பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டவும் காசிக்கு உதவியாக இருந்த அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர். 
 
 
இதனிடையே காசி பெண்களை செல்போனை மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகியது. அதில் காசி தன்னை சமூக வலைத்தளத்தில் ப்ளாக் செய்த பெண்ணை மிரட்டிப் பேசுவது பதிவாகி இருந்தது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
 இந்நிலையில் காசியின் வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழகக் காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.