சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை குன்றத்தூர் பகுதியிலுள்ள போரூரை சேர்ந்த சிறுமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது
தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்தது. விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். பின் தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போரூர் சிறுமி கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14ஆம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து குற்றவாளி தஷ்வந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் கதவுகள் மூடப்பட்டன. நீதிமன்றத்திற்குள் போலீஸ் தரப்பு வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. செய்தியாளர்கள் யாரும் உள்ளேஅனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே நண்பகல் 12 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், 3 மணி தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி 3 மணியளவில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் ஆள்கடத்தல், பாலியல் கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று பதட்ட நிலை ஏற்பட்டது.