குற்றம்

OYO-ல் தங்காத அறைக்கு செலவான 699 ரூபாய் - அதிகரிக்கும் இணையவழி மோசடி

OYO-ல் தங்காத அறைக்கு செலவான 699 ரூபாய் - அதிகரிக்கும் இணையவழி மோசடி

கலிலுல்லா

oyo-ல் தங்காத அறைக்கு காசு கேட்டு வந்த குறுஞ்செய்தியால் 699 ரூபாயை இழந்த நபர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா இரும்பாநாடு ஊராட்சி தாரணி கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவு இலக்குமணன். பொறியியல் பட்டதாரியான இவர் தனது உறவினரை வெளிநாட்டிற்கு வழியனுப்பி வைப்பதற்காக, இரண்டு சக நண்பர்களுடன் திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். உறவினரை விமான நிலையத்துக்குள்ளே அனுப்பிவைத்த பின்னர், அந்த நள்ளிரவில் சொந்த ஊருக்கு பயணிக்காமல், திருச்சியிலேயே தங்கி ஓய்வெடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

பின்னர் அறிவு இலக்குமணன் தனது செல்போன் உதவியுடன் OYO என்ற செயலியின் வாயிலாக, திருச்சியில் விமான நிலையம் அருகில் உள்ள ஹோட்டல்களின் பட்டியலை பார்த்துள்ளார். அதில் Grandstay என்ற ஹோட்டலை தேர்வு செய்து அதில் தங்கும் அறை ஒன்றினை, ₹699 முன் பணம் செலுத்தி பதிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து OYO நிறுவனம் Grandstay Hotel அமைந்துள்ள இடத்தை அடையாளம் காட்டும் கூகுள் வரைபடத்தை இவருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனைக்கொண்டு, திருச்சியில் அந்த ஹோட்டலை இரண்டு நண்பர்களுடன் இணைந்து 3 மணிநேரம் தேடி இருக்கிறார். அப்படி ஒரு ஹோட்டல் திருச்சியில் இல்லை என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

மன வேதனையோடு Oyo நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, அப்படி ஒரு ஹோட்டல் திருச்சியில் இல்லை என்பதை தெரியப்படுத்தியிருக்கிறார்.

Oyo நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை சேர்த்தவர்கள் Grandstay ஹோட்டலின் மூன்று தொலைபேசி எண்களை கொடுத்துள்ளார்கள். அதில் இரண்டு எண்களில் அழைப்பை யாரும் எற்கவில்லை. மற்றொரு எண்ணில் அழைப்பை ஏற்றுவர், தான் கேரளாவில் இருந்து பேசுவதாகவும், ராங் நம்பர் என்றும் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

மீண்டும் Oyo நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு நடந்ததை சொல்லியிருக்கிறார்கள். சேவை மையத்தினர், 'அந்த முன்பதிவை ரத்து செய்துவிடுங்கள். நீங்கள் முன்பதிவுக்காக செலுத்திய பணம் 7 முதல் 14 நாட்களுக்குள் உங்களது வங்கிக் கணக்குக்கு திரும்பி வந்துவிடும்' என்று கூறியிருக்கிறார்கள்.

இதனை நம்பி முன்பதிவை ரத்து செய்திருக்கிறார். அடுத்த நொடியே அறிவு இலக்குமணனின் செல்போனுக்கு, ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது. அதில் ஹோட்டலில் தங்குவதற்கான முன் பதிவை ரத்து செய்ததற்கான கட்டணம் ₹699 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்று. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அறிவு இலக்குமணன், தனது நண்பர்களுடன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்த மற்றொரு தனியார் ஹோட்டலுக்கு நேரில் சென்று அறையை பதிவு செய்து தங்கியுள்ளார்.

ரூ.699 பணத்தை இழந்து மன உளைச்சல் அடைந்த அறிவு இலக்குமணன், தான் மோசடி செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்கிறார். அதேசமயம் இது குறித்து அவர் காவல் நிலையத்தல் எந்த புகாரும் அளிக்கவில்லை. காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தால், தனது சொந்த கிராமத்தில் இருந்து திருச்சிக்கு வந்து செல்ல, ஏமாந்து இழந்ததைவிட கூடுதலாக செலவாகும் என்று அஞ்சுவதாக கூறுகிறார்.

இணைய வழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களையும், தங்களது உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ள மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது.