குற்றம்

சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கல்: மதுரை பாஸ்போர்ட் அலுவலக கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு

JustinDurai
இலங்கையைச் சேர்ந்தவருக்கு சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக, மூவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மதுரை புதுத்தாமரைத்தொட்டி பகுதியில் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் மூத்த கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் வீரபுத்திரன் என்பவர் சட்டவிரோதமாக பணம் பெற்றுக்கொண்டு பாஸ்போர்ட் வழங்குவதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக சிபிஐ காவல்துறையினர் ரகசியமாக நடத்திய விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த சிலருக்கு இந்தியர்கள் என சட்ட விரோதமாக பாஸ்போர்ட் வழங்கி வந்தது தெரியவந்தது.
மேலும் மூத்த கண்காணிப்பாளர் வீரபத்திரன், தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் ரமேஷ் என்பவரின் துணையுடன் 45 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து வீரபுத்திரன் மற்றும் முகவர் ரமேஷ் மற்றும் பாஸ்போர்ட் வாங்கியவர் ஆகிய 3 பேர் மீது மதுரை சிபிஐ மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.