குற்றம்

அந்த குழந்தை என் குழந்தை இல்லை: திருமணத்தை மீறிய உறவால் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

அந்த குழந்தை என் குழந்தை இல்லை: திருமணத்தை மீறிய உறவால் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

webteam

ஆரணி அருகே திருமணத்தை மீறிய உறவால் 2 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் ஊராட்சிக்குபட்ட காங்கரனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசுதா (27). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அப்போது அதே மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த சென்னைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் ஜெயசுதா கருவுற்ற நிலையில் குணசேகரன் ஜெயசுதா தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து கர்ப்பிணியாக தாய் வீட்டில் இருந்த ஜெயசுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தனது குழந்தையுடன் தனியாக வசித்துவந்த ஜெயசுதாவிற்கு அவரது உறவினரான மேஸ்திரி வேலை செய்யும் மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியது.

இந்நிலையில் மாணிக்கத்திற்கு ஏற்கெனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் தீட்னாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். ஆனால், மாணிக்கம் தன்னுடைய குடும்பத்தினரை கைகழுவி விட்டு ஜெயசுதா உடன் சேர்ந்து ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து மாணிக்கம் தினந்தோறும் மது குடித்து விட்டு வந்து ஜெயசுதாவிடம், உன் குழந்தை எனக்கு பிறக்கவில்லை உன் முதல் கணவர் குணசேகரனுக்கு பிறந்தது என்று 2 வயது குழந்தையை பலவகையிலும் தாக்கி கொடுமை படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 21 ஆம் தேதி மாணிக்கம் வழக்கம் போல் மது குடித்து விட்டு ஜெயசுதாவிடம் வாக்குவாதம் செய்ததோடு குழந்தையை கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த குழந்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் நிலை சரியில்லாததால் சந்தவாசல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது.

இதையடுத்து குழந்தையை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குழந்தையின் தாய் ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாணிக்கத்தை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.