குற்றம்

தென்காசி: பெண் ரயில்வே ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கேரள இளைஞர் கைது

தென்காசி: பெண் ரயில்வே ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கேரள இளைஞர் கைது

webteam

தென்காசியில் பணிபுரியும் பெண் ரயில்வே ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கேரள இளைஞரை, புகாரின் கீழ் தமிழக போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பெண்ணொருவர் பணிபுரிந்து வருகிறார். பெண் ரயில்வே ஊழியரான இவரை கடந்த 16 ஆம் தேதி இரவு (பணியில் இருந்த போது), மர்ம நபரொருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தென்காசி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அக்கம்பக்கத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, 10 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு அப்பகுதியையொட்டிய பகுதியிலிருந்த அனீஸ் (27) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அவரிடம் செய்த தொடர் விசாரணையில், அவர் ரயில்வே ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர் விசாரணையில ஈடுபட்டனர்.

அப்போது அந்நபர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்னாபுரம் தாலுகா வாழவிளை பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் அனீஸ் என்பது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அப்பெண் பணிபுரியும் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க சென்றதாகவும், அப்போது தினமும் அப்பெண்ணை நோட்டமிட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். தனது பெயிண்ட் அடிக்கும் பணி முடிவடைந்ததால், கேரளாவிற்கு திரும்ப செல்ல இருந்தநிலையில்தான் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் அனீஸ். அச்சமயத்தில் அப்பெண் சுதாரித்துக்கொண்டு கூச்சலிடவே, பயத்தில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனீஸ் மீது கேரள மாநிலம் குன்னிகோடு காவல் நிலையத்தில் ஏற்கெனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேற்கொண்டு இங்கும் அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.