குற்றம்

ஜாதக தோஷத்தை நீக்க 13 வயதே ஆன தன் மாணவனை திருமணம் செய்த ஆசிரியை!

Sinekadhara

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் ஜாதக தோஷத்தை நீக்க தன்னிடம் படித்து வந்த 13 வயது சிறுவனை ஆசிரியை திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அறிவியலும் விஞ்ஞானமும் அதிதீவிரமாக வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்திலும் பலர் மூடநம்பிக்கைகளை பின்பற்றுவதில் தீவிரமாக உள்ளனர். அதற்கு சான்றாக, பஞ்சாபில் ஒரு ஆசிரியை 13 வயது மாணவனை திருமணம் செய்துள்ளார். ஜலந்தூர் மாவட்டத்திலுள்ள பாஸ்தி பாவா கேல் பகுதியில் டியூஷன் நடத்திவரும் ஆசிரியைக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் இருந்தது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் வருத்தத்தில் இருந்துள்ளனர். அவருடைய வீட்டிற்கு வந்த புரோகிதர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், அந்த பெண்ணைவிட சிறியவரை திருமணம் செய்துகொண்டால் தோஷம் கழிந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.

இதனையடுத்து அந்த பெண் தனது வீட்டிற்கு டியூஷன் வரும் ஒரு சிறுவனின் பெற்றோரை அழைத்து நிறைய படிக்கவேண்டி உள்ளதாகவும், எனவே ஒரு வாரம் அவர்களுடைய வீட்டிலேயே தங்கி படிக்கட்டும் என்று கூறியிருக்கிறார். பெற்றோரும் நம்பி விட்டுச் சென்றுள்ளனர். அந்த ஒரு வாரத்தில் திருமணம் மற்றும் சடங்குகளை ஆசிரியையின் குடும்பத்தார் செய்துமுடித்திருக்கின்றனர்.

தனது வீட்டிற்கு திரும்பிய சிறுவன் பெற்றோரிடம் ஒருவாரம் நடந்த முழுவதையும் ஒன்றுவிடாமல் கூறி அழுதிருக்கிறான். உடனே சிறுவனின் பெற்றோர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், ஆசிரியையின் குடும்பம் சிறுவனை வற்புறுத்தி மெஹந்தி, திருமணம் மற்றும் முதலிரவு உள்ளிட்ட அனைத்து சடங்குகளையும் செய்யவைத்ததாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் அந்த பெண் விதவை என அறிவித்து வளையல் உடைத்து துக்கம் கொண்டாடியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர சிறுவனை நிறைய வீட்டுவேலைகள் வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி பாஸ்தி பாவா கேல் பகுதியின் காவல் அதிகாரி இந்தியா டுடேவிற்கு கொடுத்த தகவலில், முதலில் சிறுவனின் பெற்றோரே புகார் கொடுத்ததாகவும், அந்த பெண் மற்றும் குடும்பத்தார் காவல்நிலையத்துக்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தியதன்பேரில், புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.