பணகுடி நான்குவழிச் சாலையில் அளவுக்கு அதிகமாக கனிம பொருட்களை ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து இருவர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம பொருட்களை கனரக லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் எடுத்துச் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நெல்லை மாவட்ட காவல் துறையினர் அளவுக்கு அதிகமான கனிம பொருள்கள் எடுத்துச் செல்லும் கனரக லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கனிம பொருட்கள் அதிக அளவில் ஏற்றிச்செல்லும் நிகழ்வில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையடுத்து இன்று அதிகாலை பணகுடி நான்குவழிச் சாலை நெருஞ்சி காலனி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம பொருட்கள் ஏற்றிவந்த இரண்டு லாரியை பிடித்து எடை போட்டுப் பார்த்தனர்.
இதில், ஒரு லாரியில் 60 டன்னும் இன்னொரு லாரியில் 55 டன் என அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஒரு மடங்கு எடை கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதனால் இந்த இரு லாரிகளையும் பணகுடி போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து லாரியை ஓட்டி வந்த கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்த வினோத் திருவிதாங்கோடு ஜஸ்டின் சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.