குற்றம்

‘புல்லி பாய்’ விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முதன்மை குற்றவாளி ஸ்வேதா சிங்: யார் இவர்?

‘புல்லி பாய்’ விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முதன்மை குற்றவாளி ஸ்வேதா சிங்: யார் இவர்?

EllusamyKarthik

இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை மிகவும் மோசமான வகையில் சித்தரித்திருந்த புல்லி பாய் செயலி விவாகரத்தில் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஸ்வேதா சிங் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி என சொல்லப்படுகிறது. அவரை மும்பை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 

யார் அவர்?

உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஸ்வேதா, பொறியியல் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அதற்கான நுழைவுத் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்துள்ளார். அவருக்கு வயது 18. அவருடைய மூத்த சகோதரி வணிகவியல் படித்துள்ளார். அதோடு அவரது இளைய சகோதரி மற்றும் இளைய சகோதரன் பள்ளி படிப்பு படித்து வருகின்றனர்.  கடந்த வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை உயிரிழந்துள்ளார். அதற்கு முன்னதாக அவரது தாயார் புற்று நோயால் உயிரிழந்துள்ளார். 

JattKhalsa07 என்ற ட்விட்டர் கணக்கை அவர் நிர்வகித்து வருகிறார். வெறுக்கத்தக்க செய்திகள் மற்றும் புண்படுத்தும் வகையிலான புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை இதன் மூலம் அவர் பதிவு செய்துள்ளார்.  நேபாள நாட்டை சேர்ந்த நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் ஸ்வேதா செயல்பட்டுள்ளார். ஸ்வேதா உட்பட இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பங்கு இதில் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட விஷால் குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஸ்வேதா கைது செய்யப்பட்டார்.