திருமணங்கள் நடந்து முடிந்த கையோடு தம்பதியினர் விவாகரத்தும் பெறுவது இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் தம்பதிகளுக்குள் புரிதல் இல்லாமை என்று ஒரு கருத்து நிலவி வந்தாலும், பெரும்பாலும், விவாகரத்தானது இருவருக்குள் இருக்கும் ஈகோவைப் பொருத்து தான் ஏற்படுகிறது.
திருமணங்கள் மிக சுலபமாக நடந்தாலும் விவாகரத்தென்பது அத்தனை சுலபத்தில் கிடைப்பதில்லை. அதற்கு சில சட்டதிட்டங்கள் உண்டு.
இந்திய சட்டத்தின்படி தம்பதியர்கள் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தால், உரிய காரணம் இருந்தால் மட்டுமே விவாகரத்திற்கு சட்டமானது அனுமதியளிக்கிறது.
இந்நிலையில், காதல் திருமணங்களால் தான் விவாகரத்துகள் அதிகம் ஏற்படுவதாகத் தெரிகிறது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
முன்னதாக நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், திருமண தகராறு காரணமாக ஏற்பட்ட மனுவை விசாரித்துக்கொண்டிருந்தபோது, “மனுதாரர் காதல் திருமணம் செய்துக்கொண்டவர்” என்று வழக்கின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி கவாய் கூறியதாவது:
"நீதிமன்றத்திற்கு வரும் பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களால் மட்டுமே எழுகின்றன." என்று கூறினார்.
இருப்பினும் நீதிமன்றம் விவாகரத்துக்கோரி வழக்குத் தொடர்ந்த மனுதாரர்களை மத்தியஸ்தம் செய்ய முன்மொழிந்தது, ஆனால் அதை வழக்குதொடர்ந்த ஆண் நிராகரித்தார்.
இருப்பினும் தம்பதியர் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய பெஞ்ச் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.