குற்றம்

‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?

‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?

சங்கீதா

தனக்குத் தெரியாமல் படத்தின் போஸ்டரை வெளியிட்டால் கூட, மொத்த படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என ‘போர்குடி’ படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜபாண்டி பேட்டிளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆறுமுகம் பாலா என்கிற ஆறு பாலா  ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘திரௌபதி’, ‘சர்கார்’ உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக பணியாற்றியுள்ளார். இவரது இயக்கத்தில், Crowd Funding மூலம் தயாரித்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் 'போர்குடி'. கார்த்திக் என்பவர் இந்தத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். Crowd Funding முறையில் 1 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வரும் இந்தத் திரைப்படத்திற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்களான ரோல்ஷன் கருப்பசாமி, தியாகு ஆகியோர் இணைந்து 82 லட்சம் ரூபாய் வரை இயக்குநரான ஆறு பாலாவிடம் கொடுத்து இணை தயாரிப்பாளர்களாக சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இயக்குநர் ஆறு பாலா தனது மனைவி தமிழ்செல்வி மற்றும் தனக்கு தெரிந்த ராஜபாண்டி ஆகியோர் மூலம் திரைப்படத்தின் கணக்கு வழக்குகளை கவனித்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களான ரோல்ஸ்டன் கருப்பசாமி மற்றும் தியாகு ஆகியோர் இயக்குநர் ஆறு பாலா, தங்களிடம் படம் எடுக்க எனக்கூறி பணத்தைப் பெற்றதாகவும், ஆனால் படத்தை முடிக்காமல் தங்கள் பணத்தை மோசடி செய்து ஆறு பாலா, அவரது மனைவி தமிழ்செல்வி மற்றும் ராஜபாண்டி ஆகியோர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் அளித்திருந்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகரரும், இயக்குநருமான ஆறு பாலா, வெளிநாடு வாழ் இந்தியர்களான ரோல்ஸ்டன் கருப்பசாமி மற்றும் தியாகு ஆகியோர் தன்னை மிரட்டி படத்தின் உரிமை, அதன் தொடர்புடைய வங்கி கணக்கு வழக்குகளை எழுதி வாங்கிக்கொண்டு படத்தை வெளியிட தடையாக இருப்பதாகவும், இணை தயாரிப்பாளரான ராஜபாண்டி என்பவரின் பணத்தை மோசடி செய்ய திட்டமிடுவதாகவும் குற்றஞ்சாட்டி புகார் ஒன்றை அளித்தார்.

புகார் அளித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ஆறு பாலா, ரோல்ஸ்டன் கருப்பசாமி மற்றும் தியாகு ஆகியோர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார். மேலும், அவர்கள் படத்திற்காக கொடுத்தது 62 லட்சம் ரூபாய் எனவும், ஆனால் 82 லட்சம் ரூபாய் கொடுத்ததாக பொய் கூறி புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ரோல்ஸ்டன் கருப்பசாமி மற்றும் தியாகுவை சேர்த்து, மொத்தம் 11 பேர் இந்தத் திரைப்படத்தில் தயாரிப்பாளர்களாக Crowd Funding முறையில் இணைந்துள்ளதாகவும், ஆனால் அதிக பணம் நாங்கள்தான் கொடுத்தோம் எனக்கூறி படத்தின் உரிமையை அவர்கள் எழுதி வாங்கிக் கொண்டதாகவும், இயக்குநர் ஆறு பாலா குறிப்பிட்டார்.

மேலும், ‘போர்குடி’ திரைப்படத்தை அவர்கள் பாதியில் கைவிட்டபோது, ராஜபாண்டி அவரது பங்கிற்கு 15 லட்சம் ரூபாய் வரை செலுத்தி படத்தை முடிக்கும் தருவாய்க்கு கொண்டு வந்ததாகவும், ஆனால் அவருக்கும் படத்திற்கு சம்மந்தமில்லை எனக்கூறி தற்போது ரோல்ஸ்டன் கருப்பசாமி மற்றும் தியாகு ஆகியோர் பிரச்சனையில் ஈடுபட்டு வருவதாகவும், ராஜபாண்டி அளித்த பணத்தை திருப்பிக் கொடுப்பதாக வாக்களித்துவிட்டு, தற்போது அதை கொடுக்காமல் மோசடி செய்வதாகவும் அவர் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தின் மொத்த லாபத்தையும் அவர்கள் அடைய வேண்டும் என்பதற்காக தன்னை படத்தில் இருந்து வெளியேற்றத் திட்டமிட்டு, தன் மீதும் தனது மனைவி மீதும், தியாகு மற்றும் ரோல்ஸ்டன் கருப்பசாமி ஆகியோர் புகார் அளித்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான ராஜபாண்டி, இயக்குநர் ஆறு பாலா தன்னை அணுகி படம் பாதியில் நிற்பதால் தன்னை உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், அதனடிப்படையில் தான் பணம் கொடுத்து ‘போர்குடி’ திரைப்படத்தை முடிக்கும் தருவாய்க்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், தன்னை படத்திலிருந்து வெளியேற்ற ரோல்ஸ்டன், தியாகு ஆகியோர் திட்டமிட்டபோது, தான் செலவு செய்த பணத்தை திருப்பிக் கேட்டதாகவும், அப்போது தன்னை சமாதானம் பேசி பணத்தை கொடுத்துவிடுவதாக ரோல்ஸ்டன் மற்றும் தியாகு ஆகியோர் வாக்களித்துவிட்டு, தற்போது பணத்தை தராமல் தன் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்துவதாகவும் அவர் கூறினார். மேலும், தனது பணத்தை திருப்பிக் கொடுக்காமல், தன்னை ஒதுக்கிவிட்டு படத்தை விற்பனை செய்ய நினைத்தாலோ, வெளியிட நினைத்தாலோ, படத்தின் போஸ்டரை வெளியிட நினைத்தால் கூட மொத்த படத்தையும் தான் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.