குற்றம்

காதலி தற்கொலை; இறுதிசடங்கிற்கு சென்ற காதலன்; திட்டமிட்டு கொன்ற உறவினர்கள்

காதலி தற்கொலை; இறுதிசடங்கிற்கு சென்ற காதலன்; திட்டமிட்டு கொன்ற உறவினர்கள்

webteam

விழுப்புரம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்ட காதலியின் இறுதி சடங்கிற்கு சென்ற காதலனை, பெண்ணின் உறவினர்கள் திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள பெரியகோட்டக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ராகவன். சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருணா. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் அருணாவின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் இருவரும் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதையடுத்து அருணாவிற்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அருணா கடந்த 21-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த ராகவன், இறுதிச் சடங்கில் பங்கேற்க கோட்டக்குப்பம் வந்துள்ளார். பெண்ணை இழந்த உறவினர்கள் ராகவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதனை அடுத்து அவரை திட்டமிட்டு கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

ராகவனுடன் பணியாற்றும் அதேபகுதியை சார்ந்த சஞ்சய் என்பவர் மூலம் கடத்த திட்டமிட்ட அவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு ராகவனை கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே வரவழைத்துள்ளனர். அங்கிருந்து பெண்ணின் தாய்மாமன் குட்ட ரமேஷ் உட்பட 6 பேர் இருசக்கர வாகனம் மூலம் ராகவனை கடத்தியுள்ளனர்.

பின்னர் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத கோட்டக்குப்பம் அய்யனார்கோயில் பின்புறம் வைத்து ராகவனை கொலை செய்துள்ளனர். பின்னரும் ஆத்திரம் தீராத கொலையாளிகள் ராகவன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அருணாவின் அண்ணன் அருண்குமார், தினேஷ், ரஞ்சித்குமார், பிரகாஷ், சந்தோஷ், பாலாஜி மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சஞ்சய் ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான குட்ட ரமேஷை தேடி வருகின்றனர்.